Wednesday, August 6, 2014

ஊர் காசுல பிரசாதப்பை

சென்னை : சட்டசபையில், மானிய கோரிக்கை விவாதத்தின் போது, உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்க, அமைச்சர்கள் லட்சக்கணக்கான ரூபாயை செலவழிக்கின்றனர். நேற்று, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையையொட்டி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, பிரசாதப்பை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க, துறை ஊழியர்கள் பைகளுடன், தலைமைச் செயலகத்தை வலம் வந்தனர். சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. தினம், ஒன்று முதல் மூன்று துறை வரை, மானிய கோரிக்கை நடைபெறுகிறது. தினமும், எந்தத் துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெறுகிறதோ, அந்தத் துறை சார்பில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், துறை அலுவலர்கள், அமைச்சரவை அலுவலக ஊழியர்கள் என, அனைவருக்கும், காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. அத்துடன் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
பால்வளத் துறை மானிய கோரிக்கையின்போது, ஆவின் பொருட்கள் வழங்கப்பட்டன. வேளாண் துறை மானிய கோரிக்கையின் போது, இளநீர், நெல்லிக்காய் ஜூஸ், சூட்கேஸ் போன்றவை வழங்கப்பட்டன. நேற்று, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சுற்று லாத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

பிரசாதம் : சுற்றுலாத்துறை சார்பில், உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அனைவருக்கும் பிரசாத பை வழங்கப்பட்டது. பழநி முருகன் படம் அச்சிடப்பட்ட பையில், அபிராமி அந்தாதி புத்தகம், கந்த சஷ்டி புத்தகம், விநாயகர், அரங்கநாதர் படங்கள், திருக்கோவில் கையேடு, பழநி கோவில் பஞ்சாமிர்தம், இரண்டு லட்டு, முறுக்கு பாக்கெட், அதிரச பாக்கெட், மீனாட்சியம்மன் கோவில் குங்குமம், விபூதி, முந்திரி, ஹாட்பேக் ஆகியவை இருந்தன. இவற்றை, அனைத்து துறை அலுவலர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்குவதற்காக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அறநிலையத் துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள், தலைமைச்
செயலகம் வந்தனர். அவர்கள் பைகளை எடுத்துச் சென்று, ஒவ்வொரு அலுவலகமாக வழங்கினர். ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளுக்கும், கொண்டு சென்றனர்.

சொந்த பணம் : ஒவ்வொரு துறை மானிய கோரிக்கையின்போதும், அந்த துறை அமைச்சர்கள், உணவு மற்றும் பரிசுப் பொருளுக்காக, அரசு நிதி எதுவும் ஒதுக்குவதில்லை. அமைச்சர்கள், சொந்த பணத்தை செலவழிக்கின்றனர். சில துறைகளில், அதிகாரி கள் செலவழிக்கின்றனர். துறை மானிய கோரிக்கையின்போது, தினமும் காலை மற்றும் மதியம், 3,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. மதியம், 2,000 பேருக்கு, அசைவ உணவும், 1,000 பேருக்கு சைவ உணவும் வாங்கப்படுகிறது. இதற்கே லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. இது தவிர பரிசுப் பொருட்கள் வாங்கப்படுகின்றன.
இது பெரும்பாலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு கணிசமான தொகை செலவழிக்கப்படுகிறது.
இதற்கு நிதி எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என கேட்க வேண்டிய, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பரிசு பொருட்களை, ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதற்கு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் விதிவிலக்கல்ல.

இதுகுறித்து, தலைமைச் செயலக ஊழியர்கள் கூறியதாவது: இது வழக்கமான நடவடிக்கை. எந்த ஆட்சி வந்தாலும், இது தொடர்கிறது. இதற்கு நிதி எப்படி வருகிறது என, யாரும் கேள்வி கேட்பதில்லை. பரிசுப்பொருள் எப்படி உள்ளது என்று தான் பார்ப்பர். தற்போது பணியிலிருப்போருக்கு கொடுப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஓய்வுபெற்ற அதிகாரிகள், பரிசுப் பொருள் வராவிட்டால், கோபித்துக் கொள்கின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம் நடத்தி அசத்தல் : இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த, ஆலோசனைக் கூட்டம் நடத்துவதுபோல், யாருக்கெல்லாம் பிரசாதப் பை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கடந்த, 2ம் தேதி, கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட கோவில் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம், சென்னை, மயிலாப்பூரில் நடந்த கூட்டத்தில், ஒவ்வொருவரும் யாருக்கு, பிரசாதப் பை மற்றும் பரிசுப்பொருள் வழங்க வேண்டும் என, பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

செய்தி: http://www.dinamalar.com/news_detail.asp?id=1039026

No comments:

Post a Comment