பென்னலுார் : பென்னலுாரில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு இல்லாததால், பழமையான கற்சிலைகள் காணாமல் போய்விட்டன.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்டது, பென்னலுார். ராஜராஜ சோழனால், அந்த கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலின் நுழைவாயில், தென்திசை நோக்கி உள்ளது. கோவில் வளாகத்தில், கருவறை மண்டபம், நந்தி, அம்மன் சன்னிதி, நவக்கிரக சன்னிதிகள் என, தனித்தனியாக இருந்துள்ளது. இந்த நிலையில், கோவிலுக்கு அருகில் வசித்த பகுதிவாசிகள், பல்வேறு காரணங்களுக்காக, பென்னலுாரை விட்டு, வெளியேறி, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியேறினர். இதனால், கோவில் பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் போனது. கோவில் சுற்றுச்சுவர் கருங்கற்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அகத்தீஸ்வரர் கோவில் சுவர் மாடத்தில், தெற்கு மற்றும் வடக்கு சுவர்களில் இருந்த பழமையான சிலைகளை மர்ம நபர்கள், கடப்பாறையால் பெயர்த்தெடுத்து கடத்தி சென்றுள்ளனர். அதேபோல, பெரிய நந்தி, சுற்றுச்சுவர் கருங்கற்களையும், விட்டு வைக்கவில்லை. தற்போது, நுழைவுவாயில் மண்டபம், நந்தி, கருவறை மண்டபம், அம்மன் சன்னிதி, சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து, கருங்கற்கள் பெயர்ந்துள்ளன. கோவில் வளாகத்தில், முட்செடிகள் வளர்ந்து உள்ளன. கருவறை மண்டபத்தின் மீது, வளர்ந்துள்ள மரங்களால், விரைவில் அது இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.பிரதோஷ தினத்தன்று மட்டும், கிராமத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
பழமையான அந்த கோவிலை புனரமைக்கவும், தினமும் வழிபாடு நடத்தவும், திருடு போன சிலைகளை கண்டுபிடிக்கவும், இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: http://www.dinamalar.com/news_detail.asp?id=1038126&
No comments:
Post a Comment