Friday, August 8, 2014

ஆலயங்களில் தமிழ் முறைப்படி கும்பாபிசேகம் செய்விக்கலாமா? பகுதி- 1



சிவமயம்
ஆலயங்களில் தமிழ் முறைப்படி கும்பாபிசேகம் செய்விக்கலாமா? பகுதி- 1

தர்ம சாஸ்திரத்தில் கலியுக லக்ஷணம் கூறுகின்ற பொழுது, “த்யஜந்தி  ஸ்வானி கர்மானி” எனச் சொல்லப்படுகிறது அதாவது கலியுகத்தில் எல்லோரும் தங்களது தர்ம கர்மாக்களை விட்டுவிட்டு தமது சமயத்திற்கு ஒவ்வாத கர்மாக்களை செய்வார்கள் என்பது இதன் பொருள். இக்கூற்று எந்த அளவிற்கு உண்மையானது என்பது கடந்த சிலகாலங்களாக கோவை பேரூராதீனம் என்று கூறிக்கொள்ளும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அவர்களது வீரசைவமடம் செய்து வருகின்ற காரியங்களே நிரூபிக்கின்றன.

படம் 1  கோவை முட்டம் சிவன்கோயிலில் பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார் செய்வித்த தமிழ் குடமுழுக்கு

ஆலயம் அமைத்தல், தெய்வப்பிரதிஷ்டை, கும்பாபிசேக நித்ய, நைமிந்திக – காமிய பூஜைகள் ஆகியன எவ்வாறு செய்யவேண்டும் என்பதனை ஆன்மாக்கள் அறிவதற்காகவே, சிவபெருமான் இருபத்தெட்டு சைவ ஆகமங்களை அருளிச்செய்துள்ளார். இவ்வாகமங்கள் சிவாச்சாரியார்களைக் கொண்டு அனைத்து சிவாலயங்களிலும் காலங்காலமாக ஆன்றோர்களால் அனுஷ்டிக்கப்பெற்று வருகின்றன. பழங்கால சரித்திரங்களிலும், சமயப்பற்றோடு நமது சமய சாத்திரங்களை அறிந்தவர்கள் மட்டுமே இந்த உண்மையை அறிவார்கள்.

மேலும், காமிகாகமம் – தந்திராவதார படலத்தில் 104 வது சுலோகம் முதல் 127 வது சுலோகம் வரை ஆலயங்களில் பிரதிஷ்டை – கும்பாபிசேகம் ஆகியன எந்த அடிப்படையில் செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. அந்த சுலோகங்களில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு சிந்திப்போம்.

௧) கர்ஷனாதி ப்ரதிஷ்டாந்தம் மூலேனைவ ஸமாசரேத்
க்ருதம் சேத் உபயேதேன கர்த்தா பர்த்தா விநச்யதி
இதன் பொருள்: ஆலயம் அமைத்தல் ப்ரதிஷ்டை – கும்பாபிசேகம் செய்தல் ஆகியன மூல ஆகமங்களின் அடிப்படையிலேயே (ஆகம முறைப்படி!) செய்தல் வேண்டும். உபஆகமங்களின் அடிப்படையிலோ, பத்ததிகள் அடிப்படையிலோ கூட செய்யக்கூடாது. அப்படிச்செய்தால் அக்கும்பாபிசேகத்திற்குச் செலவு செய்கின்ற யஜமானர்களும், பக்தர்களும் அழிவர். (இவ்விடத்து வடமொழியில் கூறப்பட்டுள்ள உபஆகமங்கள் பத்ததிகளே கூட கூறப்படாத பொழுது தமிழ்முறைப்படி செய்தால் அதன் பலன் என்ன என்பதை உணர்தல் அவசியம்)

௨) கேவலம் யஜனம் ப்ரோக்தம் உபபேதைர் விசேஷத:
ப்ரதிஷ்டாத்யம் துமூலைஸ்சேத் அஷ்டாவிம்சதிபிர்வரம்

இதன் பொருள் : ஆலயங்களில் நடைபெறுகின்ற நித்யநைமித்திக காம்ய பூஜைகள் – ஹோமங்கள் ஆகியன மட்டுமே உபஆகமங்கள் பத்ததிகள் இவைகள் அடிப்படையாகக்கொண்டு (பத்ததி – வழிகாட்டு நூல்) செய்யலாம். ஆனால், ப்ரதிஷ்டை முதலானவற்றை மூலநூல்களாகிய இருபத்தியெட்டு சைவ ஆகமங்களின் அடிப்படையிலேயே செய்தல் வேண்டும்.

௩) யேன தந்த்ரேன ஆரப்தம் கர்ணாதி அர்ச்சனாந்தகம்
தேன ஸவம்ப்ரகர்த்கவ்யம் நகுர்யாத் அந்ய – தந்த்ரத:

இதன் பொருள் : ஒரு திருக்கோயில் ப்ரதிஷ்டை முதல் நித்ய பூஜைகள் வரையிலான வழிபாடுகள் எந்த ஆகமத்தின் அடிப்படையில் துவக்கப்பட்டதோ அந்த ஆகமத்தின் அடிப்படையில்தான் தொடர்ந்துவரும் பிற்காலங்களிலும் வழிபாடுகள் நிகழ்த்தப் பெறுதல் வேண்டும். பிறகு மற்றைய ஆகமங்களினால் கூட செய்யக்கூடாது.

௪) சிவசித்தாந்த தந்த்ரேண ப்ராரப்தம் கர்ஷணாதிகம்
நகுர்யாத் அந்ய சாஸ்த்ரேண குர்யாத் சேத் தந்த்ரஸங்கர:

இதன் பொருள் : சைவ சித்தாந்தமாகிய ஆகமங்களின் அடிப்படையில்தான் ப்ரதிஷ்டை முதலானவைகள் துவக்கப்பட வேண்டும். மற்றைய சாத்திரங்களின் அடிப்படையில் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் “சாத்திரகலப்பு தோஷம்” என்ற தவறு ஏற்படுகிறது. சாத்திரகலப்பு தோஷம் ஏற்பட்டால் நாட்டை ஆள்பவர்களும் – குடிமக்களும் அழிவர்.

எனவே விளம்பரத்திற்காகவும் தமது சுய செல்வாக்கு உயர்வதற்காகவும் பேரூராதீனம் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் அவர்கள் செய்துவரும் சமய-சாத்திர விரோதச் செயல்களை தடுத்து நிறுத்தாவிட்டால் மேற்கூறிய தீய பலன்களினால் நாம் எல்லோரும் துன்பப்பட நேரிடும் என்பதற்காகவே இந்த ஆய்வுக்கட்டுரை.
மேலும், கொங்கதேசம் தமிழகத்திலேயே அதிக செல்வா வளமிக்க ப்ரதேசமாகத் திகழ்ந்து வந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் – சேரமான் பெருமான் நாயனாருக்கும் சிவனருளால் தோழமை ஏற்பட்டதும், அதனால் பல அற்புதங்கள் நிகழ்ந்ததும் கொங்கதேசத்தில்தான்.

ஆனால், சமீப காலமாக கொங்கதேசம் சார்ந்த கோவை நகரில் குண்டு வெடிப்புகளும், மக்களின் நிம்மதியற்ற வாழ்க்கையும் – ஏற்பட்டு வருவதும், திருப்பூர் நகரில் வியாபாரம் மிக மோசமான நிலைக்குவந்து பல செல்வந்தர்கள் கஷ்டப்பட்டு வருவதும் நாம் எல்லோரும் கண்கூடாக அறிந்ததே.

இவற்றிற்குக் காரணம் பேரூராதீனம் போன்றவர்கள் செய்துவரும் சமய விரோத செயல்கள்தான் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை.

“முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்குத் தீங்குள, வாரிவளங் குன்றும்
கள்ளம களவு மிகுந்திடுங் காசினி”

என்பது திருமூலர் பெருமான் திருவாக்கு. எனவே, இதனைக் கண்ணுறும் மெய்யன்பர்கள் யாவரும் சமய விரோதச் செயல்களைச் செய்பவர் யாராயிருந்தாலும், அவர்களைத் திருத்தவும். அவர்களது தவறுகளைத் தடுத்து நிறுத்தவும் முற்படுதல் நமது சைவ சமயத்தின் தலையாய பணியாகக் கருத்தில் கொண்டு செயல்படுத்தல் அவசியம்.

இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதியவர் : ஆகம பிரவீனர் – சிவாகம பூபதி – சிவாகம ரதினாகரம் சிவஸ்ரீ A.V. சுவாமிநாத சிவாச்சாரியார்,
முதலவர், வேதசிவாகம பாடசாலை, மாயவரம்


குறிப்பு :  இந்த ஆய்வுக்கட்டுரையை, ஆசிரியர் 1999 ஆம் ஆண்டு எழுதினார்கள். கோவை மாவட்டம் – பல்லடம் வட்டம் – கருமத்தம்பட்டி அருள்மிகு சென்னியாண்டவர் கோயிலில் நாளது மாசி-மீ 9 (21-2-1999) ஞாயிற்றுகிழமை தெய்வ ஒண்தீந்தமிழ் முறைப்படி கும்பாபிசேகம், பேரூர் சாந்தலிங்க அடிகளார் தலைமையில் நடைபெற்றதின் அடிப்படையில்,  மக்களுக்கு இத்தகைய சமய விரோத கும்பாபிசேகங்களை தவிர்க்க, விழிப்புணர்வு ஏற்படுத்த இக்கட்டுரையை எழுதினார்கள்

ஆயினும், கொங்கதேசத்தில் பேரூராதினத்தின் இந்த கோயில் சமய-சாத்திர விரோத செயல்கள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


படம்  2 கோவை லாலி ரோடு மாரியம்மன் கோயிலில் நடந்த தமிழ் குடமுழுக்கு







படம்  3 துடியலூர் பன்னிமடை பட்டதரசியம்மன் கோயில் தமிழ் குடமுழுக்கு









படம் 4 பு.புளியம்பட்டி ஆலத்தூர் கரியகாளியம்மன் கோயில் தமிழ் குடமுழுக்கு













படம் 5  காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயில் தமிழ் குடமுழுக்கு
 

ஜால்ரா தட்டும் இந்து அறநிலையத்துறை

இவற்றில் பல கோயில்கள் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் ஆகும். இந்து சமய அறநிலையத்துறையும் பத்திரிக்கைகளை தீந்தமிழில் பதிக்கின்றனர். அதாவது கும்பாபிசேகம் ஆகம முறைப்படி நடப்பினும் கும்பாபிசேக பத்திரிகையில் நிகழ்ச்சி நிரலை தீந்தமிழில் அடிக்கின்றனர். மக்களும் இரண்டும் ஒன்றுதான் போலும் என்றுநினைக்கும்படி ஒரு மாயவலையை உருவாக்குகின்றனர். இது பேரூராதீனம் போன்றவர்களுக்கு பெரிய விளம்பரமாக அமைகிறது.  அதுமட்டுமன்றி ஆகம விதிப்படி கும்பாபிசேக யாகசாலைகள் பூஜைகள் அனைத்தும் நடந்தாலும் கடைசியில் கோபுரகலசத்தில் கும்பாபிசேகம் செய்யும் போது இவர்களை முன்னிலைப்படுத்தி பத்திரிகை அடித்துள்ளபடியால், நாங்கள்தான் கும்பாபிசேகம் செய்வோம் என்று கும்பகலசத்தை பறிப்பது, ரகளை செய்வது போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர். அடுத்தநாள் பேப்பரில் இவர்களை முன்னிலைப்படுத்தி செய்தி வரும். இது மேலும் பெரும் விளம்பரமாக அமைகிறது. இவற்றையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை கொண்டுகொள்ளாது. அறநிலையதுறை பிடியில் உள்ள கோயிலில்  தமிழில் கும்பாபிசேகம் நடந்தால், பத்திரிகையில் அறநிலையத்துறை சார்பாக கொடுக்கும் விளம்பரத்தில் குடமுழுக்கு விழா என்று இருக்கும். தமிழ் குடமுழுக்கு என்பதை லாவகமாக தவிர்த்து பின்னர் வரும் சட்ட சிக்கல்களை தவிர்த்து விடுவார்கள். 1947 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்து இருக்கும் கோயில் வழக்கத்தினை மாற்றுவது தமிழ் நாடு கோயில் நுழைவு சட்டத்தின்படி  குற்றமாகும்.

படம் 6 தொண்டாமுத்தூர் விநாயகர்-மாரியம்மன் கோயில் தமிழ் குடமுழுக்கு விளம்பரம் - மக்கள் கொடுத்தது







படம்  7 தொண்டாமுத்தூர் விநாயகர்-மாரியம்மன் கோயில் குடமுழுக்கு இந்துசமய அறநிலையத்துறை கொடுத்தது (எனக்கு ஒன்னுமே தெரியாது)





தமிழ் கும்பாபிசேகம் என்பது எப்படி நடக்கிறது?
ஆகமப்படி நடக்கும் கும்பாபிசேகத்தில் இருக்கும் அனைத்து சடங்குகளும் இருக்கும். ஆனால் உச்சரிக்கும் மந்திரத்திற்கு பதிலாக இவர்கள் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், அபிராமி அந்தாதி போன்றவற்றை பாடுகின்றனர். தேவாரத்தையும், திருவாசகமும் தமிழ் வேதம் என்று கூறி சம்ஸ்கிருத மந்திரங்களை மக்களின் எண்ணத்திலிருந்து புறக்கணித்து அவற்றை வழக்கொழிக்க வேண்டும் என்பது இவர்களது உள்திட்டமாக இருக்கிறது.


படம் 8,9,10,11,12  தமிழ்முறை கும்பாபிசேக அழைப்பிதழ் மாதிரி






 இத்தகைய முறையின் வரலாறு
 1954 ஆம் ஆண்டு  கோவை அருகில் உள்ள கோயில்பாளையத்தில் விநாயகர் கோயில் ஒன்றில் இந்த சமயவிரோத கும்பாபிசேகத்தை முதன்முதலில் பேரூராதீனமே நடத்தினர் என வீரசைவ மடங்கள் என்னும் புத்தகத்தில், இந்த ஆதீனத்தின் வரலாறு பற்றி குறிப்பிடுகையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் பல மடாதிபதிகள் இந்த வீரசைவமடத்தில் இருந்துள்ளனர் ஆயினும் அவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக தெரியவில்லை. மறைமலைஅடிகளின் தனித்தமிழ்  வழித்தோன்றலாக வந்த திராவிட இயக்க வளர்ச்சி வரும்போது  இந்த மடம் தன்னை தமிழ்காவலன் போல் மாற்றிக்கொண்டு சமய விரோத செயல்களில் குறிப்பாக கோயில்களிலும், தன்னை காணவரும் மக்களிடமும், பின்னர் தமிழ் கல்லூரி என்று ஒன்றை ஆரம்பித்து தமிழ் வெறியை அதில் கற்ற மாணவர்களிடம் ஊட்டி வளர்த்துள்ளது. இன்று அதில் பயின்ற மாணவர்கள் சிலர் தமிழ்புலவர்களாக வளம் வருவதுடன் இந்த மடத்தின் சமய- சாத்திர விரோத போக்கிற்கு உரமேற்றி பலநடைமுறைகளை தந்தம் சமூகத்தினரிடைய பரப்பி வருகின்றனர். அதோடு பிறவீரசைவ மற்றும் சைவ மடங்களை தங்களின் முறையை சமீபகாலமாக பின்பற்ற வைக்கின்றனர். அத்தோடு பாரம்பரிய ஆதிசைவ, ஸ்மார்த்த மடங்களின் பெயரை பின்வரும் கோயில் கல்வெட்டில் இருப்பது போல் கீழே ஒதுக்கிவிடுவர்.

Image 13 இந்த தமிழ் முறையில் பேரூராதீனத்தின் தலைமையில் தன்னை விளம்பரபடுத்தும் பிறவீரசைவ மற்றும் புதுமடங்கள்


சமுதாயத்தில் அமைதியாக ஏற்றப்படும் நச்சு
அதோடு நில்லாமல் மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றி இவர்கள் விளம்பரப்படுத்தும் தமிழ் முறையில் வீடு புண்யார்ச்சனை, தமிழ் திருமணம் என மக்களிடம் பரப்பி வருகின்றனர். பாரம்பரியத்தை கோயில் முதல் குடிமக்களின் பழக்கம் முதற்கொண்டு மாற்றும் எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிராமணர்களை எதிர்த்து தி.க.வினர் பிரச்சாரம் செய்வது போல் இந்த மடத்தில் அடிபொடிகள் பல இடங்களில் பேசி வருகின்றனர். கோவை மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள ஆலத்தூர் கரியகாளிஅம்மன் கோயிலில் சமய விரோத கும்பாபிசேகத்தை நடத்தி அங்கே மேடை போட்டு அங்கே கோயில் குடிமக்களின் அழைப்பில் வந்திருந்த சிவாசார்யார்களை கேவலப்படுத்தியும், இழித்துரைத்து பேசியும் சமூகபிளவை ஏற்படுத்தி வருகின்றனர். இதில், சாந்தலிங்க அடிகளாரோ அல்லது அவரது இளைய பட்டம் மருதாச்சல அடிகளாரோ இதை நேரடியாக செய்வதில்லை. இவர்களது தமிழ் கல்லூரி பட்டதாரிகளும், அடியார் தொண்டர் பெருமக்களையும் வைத்தே செய்விக்கின்றனர். பிராமண த்வேசத்தை, புறக்கணிப்பை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சமுதாயத்தில் ஏற்றி வருகின்றனர். இவர்களுக்கு உரமிடுவது போல் சில சிவச்சார்யார்களும் மது அருந்துவது, யாகசாலையில் பான்பராக், வெத்தலை போடுவது, கோயிலுக்குள், யாகசாலைக்குள் செல்போன் பேசுவது, ஒழுங்காக மந்திரம் சொல்லாமல் ஏமாற்றுவது போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு கோயிலின் சானித்யத்தை கெடுக்கும் சமய-சாத்திர விரோத கும்பாபிசேக பிரச்சாரத்திற்கு வழிகோலுகின்றனர். இது கசப்பான உண்மையாகும்.




பசுந்தோல் போர்த்திய புலியாக வலம்வரும் பேரூராதீனம்

நம்மூரில் மக்களும், காவியுடை அணிந்து  கொண்டு யாரவது மூச்சு விடாமல் பேசினாலோ, தமிழ் பாசுரங்கள் பாடினாளோ, பிரசங்கம் செய்தாலோ, அல்லது பெரிய மனிதர்கள் யாராவது இத்தகையத்தை பின்பற்றிநாளோ அவர்களை அப்படியே நம்பி விடுகின்றனர். உதாரணம் சமீபத்தில் நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்திக்கின் திருமணம் தமிழ் முறைப்படி பிரம்மாண்டமான அளவில் நடந்தது. இது இவர்களின் தமிழ் முறைதிருமண வியாபாரத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. சிவகுமார் அவர்களின் சமூக வழக்கப்படி பார்த்தாலும் ஊரின் பெரியவரான அருமைக்காரரை கொண்டும் செய்யப்படும் திருமணம் தமிழல்லாமல் வேற்றுமொழியா என்ன? ஆயினும் மக்கள் பாரம்பரியத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதை இந்த மடம் குறிவைத்து இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கி மக்களை ஏமாற்றி, சூறையாடி வருகிறது. அவர்களது போதனைகளை ஆராயாமல் அப்படியே சிரமேற்கொண்டு ஏற்கின்றனர். இவர்கள் மீது மாபெரும் புகார்கள் உள்ளன. ஆயினும் தக்க ஆதாரமில்லால் அவற்றை கூறவிரும்பவில்லை. ஆயினும், இவர்கள் தி.க., மதமாற்றம் போல்  கலாச்சார சீர்கேடுகளை தோற்றுவிக்கும் பின்னணியில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்கிற அளவுக்கு இவர்களது கடந்த கால மற்றும் தற்கால நடவடிக்கைகள் அமைந்துள்ளன. கொள்கை அடிப்படையில் இவர்களுக்கு ஒற்றுமையா அல்லது நேரடி தொடர்பிருக்கிறதா என்பது அந்த சிவனாருக்கே வெளிச்சம். மொத்தத்தில் இவர்கள் பசுந்தோல் போர்த்திய புலியாக சமூகத்தில் வலம்வருகின்றனர் என்பது மட்டும் நிதர்சனம்.

எனவே ஆய்வுகட்டுரையாசிரியர் மாயவரம் சுவாமிநாத சிவாச்சாரியார் கூறியபடி இவர்களை கண்ணுறும் அவர்களைத் திருத்தவும். அவர்களது தவறுகளைத் தடுத்து நிறுத்தவும் முற்படுதல், அல்லது அவர்களை கோயிலில் தவிர்க்கவும் நமது சைவ சமயத்தின் தலையாய பணியாகக் கருத்தில் கொண்டு செயல்படுத்தல் அவசியம்.


அடுத்த பகுதியில்

ஆலயங்களில் தமிழ் முறைப்படி கும்பாபிசேகம் செய்விக்கலாமா? பகுதி- 2 இல் திருமுருகன்பூண்டி திரு.அர்த்தநாரிசிவம் மற்றும் திரு.விஸ்வநாதன் செட்டியார் அவர்களும் வேத ஆகம நெறிகளை அறிவிக்கும் பொருட்டு அளிக்கும் ஆய்வுக்கட்டுரை (1999 ஆண்டு ஆசிரியர் இருவரும் சாந்தலிங்கருக்கு அளித்த சான்றோர் விளக்க கடிதத்தை அடிப்படையாக கொண்டது )



No comments:

Post a Comment