Saturday, March 8, 2014

கோவில் பணத்தில் அமைச்சருக்கு'இன்னோவா'


சென்னை, மயிலாப்பூரில், பெரும் பணக்காரர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு, சென்னையில் பல இடங்களில், மிக மிக மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அவற்றில், ஒரு சொத்தில் இருந்து வரக்கூடிய வருமானம் மூலம் மட்டுமே, மயிலை கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி, ஒரு கி.மீ., சுற்றளவில் இருக்கக்கூடிய, எல்லா ஏழைக் குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை இலவசமாக, நல்ல கல்வி நிலையங்களில், எந்த செலவும் இல்லாமல் படிக்கலாம். ஒரு சொத்தில் இருந்தே இவ்வளவு நல்ல காரியம் செய்யலாமா? அந்தப் பணக்காரர் யார்? ஏன் அவர் இப்படிப்பட்ட தர்ம செயல்களை செய்யவில்லை? என்றெல்லாம், கேட்கத் தோன்றுகிறதா?
அந்தப் பணக்காரர் சாட்சாத் கபாலீசுவரர்தான். அவர் பெயரில், தர்ம காரியங்கள் நடக்காமல் இருப்பதற்கு முழுக் காரணம் அறநிலைய துறையும், அதில் நிலவும் அரசியலுமே. ஆண்டவன் சொத்து, அரசியல்வாதிகளால், எப்படி சூறையாடப்படுகிறது என்பதற்கும், அறநிலைய துறையிடம் இருந்து கோவில்கள் ஏன் மீட்கப்பட வேண்டும் என்பதற்கும், கபாலீஸ் வரரின் சொத்துகள் ஒரு உதாரணம் தான். கபாலீஸ்வரர் கோவிலின், (அறக்) கட்டளைக்கு, சென்னையில் பல முக்கிய இடங்களில் சொத்துகள் உள்ளன. அவற்றில் ஒரு பகுதியாக, சென்னை சேமியர்ஸ் சாலையில், 305 மனைகள் உள்ளன. அங்கு ஒரு மனைக்கு, அரசு வழிகாட்டுதலின் படி, மாதம் ஒன்றிற்கு மூன்று லட்சம் ரூபாய் வாடகை வரவேண்டும். அதாவது, அந்த ஒரு சொத்தில் இருந்து மட்டும், ஆண்டுக்கு, 110 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டும். இந்த வருமானம், கோவிலின் அனைத்து செலவுகளையும் சந்திக்க போதுமானது. செலவுகள் போக, இந்து தர்மத்தின் நலனுக்காக, பற்பல அறக்காரியங்களை மேற்கொள்ள முடியும். கபாலீஸ்வரர் கோவிலின் அனைத்து சொத்துக்களும், இப்படியே செலவிடப்பட்டால், அரசு திறந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையை போல, பல மருத்துவமனைகளை திறந்து, நடத்தலாம்.

இதேபோல், திருவண்ணாமலை அருணாசலேசுவரருக்கும், காஞ்சி ஏகாம்பரேசுவரருக்கும், மயிலை மாதவப் பெருமாளுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சென்னையில் உள்ளன. அவற்றில் இருந்து, இந்த கோவில்களுக்கு, சந்தை மதிப்பில் நூறில் ஒரு பங்கு கூட, வருமானம் வருவதில்லை. அறநிலைய துறை சட்டத்தைப் பார்த்தால், மூன்று விஷயங்கள் நமக்குத் தெளிவாகப்புரியும்.

* அரசியல் அமைப்பு சட்டப்படி, அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டிய நம் நாட்டில், அரசுக்கோ, அறநிலைய துறைக்கோ கோவில் உள்ளே, சுத்தமாக எந்த வேலையும் கிடையாது. அவர்கள் கோவில் உள்ளே அலுவலகம் கட்டி, ஒவ்வொரு வழிபாட்டிலும் குறுக்கீடு செய்வதும், மேற்பார்வை செய்வதும் சட்டவிரோதம் மாத்திரமல்ல; மத விஷயங்களில் தலையிடும் அநியாய செயலாகும்.

* அறநிலைய துறை செயல் அலுவலருக்கு, கோவில் சொத்துகளை பாதுகாப்பது, அவற்றில் இருந்து வரவேண்டிய முறையான வருமானத்தை தவறாமல் பெறுவது ஆகியவை மட்டுமே பணி.

* அதற்காக, கோவில்களின் அசையா சொத்துக்களைப் பாதுகாக்க, அறநிலைய துறைக்கும், செயல் அலுவலருக்கும், சட்டத்தில் மிகச்சிறப்பான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை பயன்படுத்தி, நீதிமன்றங்களுக்கு செல்லாமல், நேரடியாகவே, ஆக்கிரமிப்பாளர்களையும், வாடகை பாக்கி உள்ளவர்களையும் வெளி யேற்றலாம். வராத தொகையை, ஜப்தி செய்தும் எடுக்கலாம்.
* சரி, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, ஒரு மதத்தின் வழிபாட்டில் தலையிட்டாகி விட்டது, பின், அதற்காக இயற்றப்பட்ட சட்டத்தையாவது அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் கடைபிடிக்கிறார்களா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம் இது, நேரடியாக பணம் சம்பாதித்துக் கொடுக்கக் கூடிய துறை. வரிப்பணத்தை செலவிட்டு, டெண்டர் விட்டு, பல்வேறு இடங்களில் கணக்குக் காட்டி எல்லாம் சம்பாதிக்க வேண்டியது இல்லை, நேரடியாக பணம் சம்பாதிக்கலாம்.
* 'ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு பெரிய தொகையை இப்போதே மொத்தமாகக் கொடுத்து விடு; எனக்கும், அதில் பாதி அளவு கொடு. 30 ஆண்டுகளுக்கு, கேட்பாரின்றி இந்த இடத்தை அனுபவித்துக் கொள்ளலாம்' என, செயல் அலுவலர் எடுத்துச் சொல்வார். இப்படி நேரடி வருமானம் உள்ள பசையான துறையாக இது இருக்கிறது.

* கோவில் நிலங்களில், ஆயிரக்கணக்கில் குடியிருப்போர், குத்தகைதாரர்களிடம், 'நீங்கள் எங்கள் கட்சிக்கே ஓட்டு போடுங்கள். உங்களை நாங்கள் இங்கிருந்து காலி செய்ய மாட்டோம்; வாடகையையும் உயர்த்த மாட்டோம்' என, ஓட்டுப் பிச்சையும் எடுக்கலாம். உண்மையில் கோவிலில் இருந்து, நேரடியாக குத்தகையோ, வாடகை உரிமையோ முறையாகப் பெற்றவர்கள் மிகக் குறைவு. வேதாரண்யத்தில், 2,000 ஏக்கர் கோவில் நிலங்களை, ஏக்கருக்கு, இரண்டு ரூபாய் வீதம் அரசே குத்தகைக்கு எடுத்து, அதை நூற்றுக்கணக்கானோருக்கு, உள்குத்தகைக்கு விடுகிறது. அதை, 40-50 ஆண்டுகளாக, எந்த கமிஷனரும் கேள்வி கேட்கவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு, எல்லாக் கோவில்களிலும், கோவில் பணத்தை எடுத்து திதி கொடுக்க, அறநிலைய துறை கமிஷனர்கள் அனுமதிக்கின்றனர். அந்த திதி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு கோவில் நடை சாத்தப்பட்டபின் அமைச்சர் வந்தாலும், அவர் வசதிக்காக நடை மீண்டும் திறக்கப்படுகிறது. இப்படி செய்பவர், குத்தகை அநியாயத்தை எங்கே தட்டிக்கேட்கப் போகிறார்? 'கோவில் பணத்தில், அறநிலைய துறை அமைச்சர் உபயோகத்திற்காக, 16 லட்சம் ரூபாய்க்கு, 'இன்னோவா கார் வாங்கலாம்' என, இதே அறநிலைய துறை கமிஷனர்கள் தானே, உத்தரவில் கையெழுத்து போட்டுக் கொடுக்கின்றனர்! தமிழக கோவில்களை பொறுத்தவரை, ஆட்சிகள் மாறலாம், ஆனால், அரசியல் மாறுவதில்லை. அறநிலைய துறையில் காட்சிகளும் மாறுவதில்லை.

டி.ஆர்.ரமேஷ், தலைவர், ஆலய வழிபடுவோர் சங்கம்

No comments:

Post a Comment