Thursday, May 8, 2014

Hindu groups protest against ‘unauthorised’ gospel hall

Hindu right wing organisations led by the BJP here staged a demonstration protesting against the alleged use of a building leased out on a temple land for gospel propagation. Following this, the HR & CE has intervened to invoke Section 78 of the HR & CE Act, against the unauthorised construction of a gospel hall by the lessee.
The BJP, along with Hindu Munnani and other fringe right wing groups, have raised objections to the construction of a hall within a building complex for weekly gospel propagation by the lessee of the building.
The building on the temple land of Varadaraja Perumal temple was leased out for commercial purpose.
Rathinavelu, Assistant Commissioner of Hindu Religious and Charitable Endowments, Nagapattinam, told The Hindu that the department would treat the tenant as an encroacher and had the lessee evicted on grounds that the construction was unauthorised.
“We received a petition from the BJP and we already spoke to the concerned tenant, who has held the lease to the commercial building complex for many years. However, he had not taken permission for the said construction. It is evidently a hastily constructed hall for gospel propagation without our permission.”
“However, no gospel sessions were held there for the last two months, after our intervention. But the construction was done hastily. Now, the department will act on the grounds of rent arrears, and unauthorised construction and the tenant would be treated as an encroacher under Section 78, Mr.Rathinavelu said.
As a follow up, peace talks had been scheduled to be held here under Nagapattinam Tahsildar on Thursday.
Another HR&CE official told The Hindu that while no specific rule forbids use of temple land for use of other religious activities, the lease agreement should explicitly state the purpose of tenancy. The grant of permission whatever the purpose of tenancy solely rested with the department, the official said.

  • ‘Premises used for gospel propagation’
  • ‘The tenant would be treated as an encroacher’
  • Friday, April 18, 2014

    'அறநிலைய துறை மூலம் செய்த நியமனங்கள் எதுவும் செல்லாது'

    சென்னை: ''அறநிலைய துறை சட்டத்தின் மூலம், கோவில் செயல் அலுவலரை நியமனம் செய்ய, வழிமுறை இல்லை. இதுவரை செய்த நியமனங்கள் அனைத்தும், செல்லு படியாகாது,'' என, ஆலய வழிபடுவோர் சங்க செயலர், டி.ஆர்.ரமேஷ் கூறினார்.

    நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள, வைத்தியநாத சுவாமி தேவஸ்தானம், தருமபுர ஆதீன கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கோவிலை, அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து, ஆதீனத்திற்கு, அறநிலைய துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக, தருமபுர ஆதீனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலைய துறையின் நோட்டீசை ரத்து செய்தார். அவர் தன் தீர்ப்பில், 'அறநிலைய துறை சட்டப் பிரிவு ௪௫ன் படி, கமிஷனர், ஒரு கோவிலில் செயல் அலுவலரை நியமிக்க முடியாது' என, குறிப்பிட்டார். இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் சங்க செயலர், ரமேஷ் கூறிய தாவது:

    இந்து மத கோவில்களை, அறநிலைய துறை, தன் நிர்வாகத்தில் கொண்டு வர முடியாது. 39 ஆயிரம் கோவில்களை, அறநிலைய துறை, தன் நிர்வாகத்தின் கீழ் வைத்து உள்ளது, சட்ட விரோதம். கடந்த, 55 ஆண்டுகளாக, அதிகாரமே இல்லாத, இந்து சமய அறநிலைய துறை சட்டத்தின், 45வது பிரிவை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கோவில்களை மக்களிடம் இருந்து, அரசு பிடுங்கியுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் தீர்ப்பில், செயல் அலுவலர் நியமிப்பது தொடர்பாக, உச்சநீதிமன்றம், வழிகாட்டியுள்ளது.
    * அதன்படி, ஒரு சமய நிறுவனத் தில், பெரும் நிர்வாகக் குறைபாடு இருந்தால் மட்டுமே, குறைபாடுகளை களைய, செயல் அலுவலரை குறுகிய காலத்திற்கு, நியமனம் செய்யலாம்.
    * நிர்வாகத்தை சரி செய்யும் நோக்கம் மட்டுமே, அறநிலையத் துறைக்கு இருக்க வேண்டும்.
    * சரி செய்த மறு நிமிடம், கோவிலை, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
    * செயல் அலுவலர் நியமன உத்தர வில், நியமன காலம் குறிப்பிடப்படாவிட்டால், அந்த உத்தரவு செல்லாது. அதையே, உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளது. மேலும், மிக முக்கியத்துவம் வாய்ந்த தகவலையும், உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்து சமய அறநிலைய துறை கமிஷனர், செயல் அலுவலரை, நியமனம் செய்ய, 45வது சட்டப்பிரிவை பயன்படுத்துகிறார். அந்த பிரிவில் இருக்க வேண்டிய நிபந்தனைகள், சட்டத்தில் இல்லை. அதனால், அந்த பிரிவை பயன்படுத்த, கமிஷனருக்கு எந்த அதிகார மும் கிடையாது. அதிகாரமே இல்லாத, அந்த பிரிவை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கோவில்களில், அறநிலைய துறை, செயல் அலுவலர்களை நியமித்து வந்துள்ளது. அதே தீர்ப்பு தான், வைத்தீஸ்வரன் கோவில் விவகாரத்திலும்,குறிப்பிடப்பட்டுள்ளது.

    செயல் அலுவலர் நியமனம் செய்ய அதிகாரமே இல்லாத பிரிவை பயன்படுத்தி, சேலம் சுகவனேஸ்வரர் கோவில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோயில் போன்ற முக்கிய கோவில்களில், சட்ட விரோதமாக செயல் அலுவலர்களை நியமனம் செய்துள்ளது அறநிலைய துறை. பாக்கி இருப்பது அறநிலைய துறை சட்டம் அத்தியாயம், 6வது பிரிவின் மூலம் செயல் அலுவலர் நியமனம் செய்யும் அதிகாரம் தான். இந்த அத்தியாயத்தில் உள்ள பிரிவுகள், 1954ல், உச்சநீதிமன்றத் தால், தடை செய்யப்பட்ட பிரிவுகள். அவற்றை, 1959ல் புதிய சட்டம் இயற்றும்போது சத்தம் போடாமல், மீண்டும் கொண்டு வந்து விட்டது, அன்றைய தமிழக அரசு. அதனால் தானோ, என்னவோ, அறநிலைய துறை, ஒருமுறை கூட இந்த பிரிவை பயன்படுத்தவில்லை. மேம்பட்ட நிர்வாகம் என்ற காரணம் காட்டி, அறங்காவலர்களை நீக்கி விட்டு, தன் துறையை சேர்ந்த அதிகாரியை, 'தக்காராக' காலவரையின்றி நியமனம் செய்து, கோவில்களைக் கைப்பற்றப் பார்க்கிறது; இது, சட்டவிரோதம். இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. அறநிலைய துறை சட்டத் தின் மூலம் செயல் அலுவலரை நியமனம் செய்ய வழிவகையே இல்லை. இதுவரை செய்த நியமனங்கள் எவையும் செல்லுபடியாகாத நியமனங்கள்.
    இவ்வாறு, அவர் கூறினார்.

    http://www.dinamalar.com/district_detail.asp?id=957122

    Sunday, April 13, 2014

    50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் "சுவாகா!'


    கோவில் மற்றும் அறக்கட்டளைகளின் நிலங்களை கையகப்படுத்துவது, கூடிய மட்டும் தவிர்க்கப் பட வேண்டும் என்றும், தகுந்த மாற்று நிலம் கிடைக்காத போது, கடைசி கட்டமாகத் தான் கோவில் நிலங்களை பொது நன்மைக்காக எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் அரசாணைகளும், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களும், தெள்ளத்தெளிவாக கூறுகின்றன. "ஆணையரின் அனுமதி இல்லாமல் கோவில் சொத்துக்களை விற்க முடியாது, கோவிலின் நலனுக்கு விரோதமாகவும் விற்க முடியாது' என, அறநிலைய சட்டம் பிரிவு சு 34 கூறுகிறது. பிரிவுகள், 78 மற்றும் 79, கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கும், வருமான பாக்கிகளை ஜப்தி செய்து எடுக்கவும், இந்த துறை அதிகாரிகளுக்கு மிகச் சிறப்பான அதிகாரங்களை அளிக்கின்றன. சட்டமும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் இவ்வாறு இருக்கும் போது, கோவில் சொத்துக்களில் இருந்து, 90 சதவீதம் வருமானம் வராமல் இருப்பதும், மிகப் பெரிய அளவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதும், இந்த துறை தேவை தானா என்ற, கேள்வியை எழுப்புகிறது. வருமானத்தை தான் சரியாக பெறவில்லை. மதிப்பு மிக்க நிலங்களையாவது இந்த துறை காப்பாற்றுகிறதா என்றால், உங்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. கடந்த, 1986ல், 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கோவில்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் சொந்தமாக இருந்ததாக, அரசு கொள்கை குறிப்பு தெரிவிக்கிறது. இந்து சமய நிறுவனங்களுக்கு இப்போது உள்ள நிலங்களின் பரப்பு, 4.78 லட்சம் ஏக்கர். அதாவது, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் சேர்த்தால், ஏறத்தாழ, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இந்த துறை தொலைத்து உள்ளது. இது மிகப்பெரிய அநியாயம்! இப்படியே போனால் கோவில்களுக்கு நிலங்கள் சொந்தம் என்பதை நாம் கல்வெட்டில் தான் பார்க்கலாம். அந்த கல்வெட்டுகளும், புனரமைப்பு என்ற பெயரில், இந்த துறை அதிகாரிகளால், கண்மூடித்தனமாக பெயர்த்து எறியப்பட்டும், உடைக்கப்பட்டும் வருகின்ற நிகழ்ச்சிகளை நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். நடப்பது என்ன? நிலம் தேவை என்றால் தமிழக அரசு முதலில் கை வைப்பது கோவில் நிலங்களில் தான். அதிலும், 50, 60 ஏக்கர்கள் மேல் தேவை என்றால் அரசு வேறு எங்கும் தேடுவதில்லை. நேராக கோவில் நிலத்தில் கை வைத்துவிடுகிறது. கோவில் நிலத்தை விற்பதற்குத் தக்காருக்கோ, செயல் அலுவலருக்கோ எந்த உரிமையும் கிடையாது. அரசே முன் மொழிந்து, அரசே பரிந்துரை செய்து, அரசே விற்பனைக்கு ஒப்புதலும் அளிக்கும் அநியாயத்தை தமிழகத்திலும், புதுவையிலும் நாம் திரும்பத் திரும்ப பார்கலாம்.

    திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை கட்ட, இப்படி தான் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு எடுத்துக் கொண்டது. இதில், மேலும் ஓர் அநியாயம், அப்படி கட்டடங்கள் கட்ட எடுத்துக் கொண்ட நிலங்களில், ஓர் ஏரியும் அடங்கும். நீர் நிலைகளில் எப்படி கட்டடங்கள் கட்டலாம்? அப்படி செய்தால், அரசுக்கும், சாதாரண ஏரி ஆக்கிரமிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?
    கோவில் நிலங்கள் கொள்ளையில் நடக்கும் அநியாயங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.
    சிக்கல் சிங்காரவேலர் கோவில் நிலங்களுக்கு இழப்பீடு சம்பந்தமான கோப்பு, 10 ஆண்டுகளாக ஆணையர் அலுவலகத்தில் தூங்குகிறது
    "மதுரையில், 50 ஏக்கர் நிலங்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தான் சொந்தம்' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பின்பும், தமிழக அரசும் அறநிலைய துறையும் சேர்ந்து, வழக்கில் தோற்றுப் போன ஆக்கிரமிப்பாளனுக்கே விலைமதிப்பற்ற அந்த நிலங்களை பட்டா போட்டுக் கொடுத்தன
    அதேபோல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சாதகமாக வந்த பின்பும், மயிலாடுதுறை சாமவேத பாடசாலையின் நிலங்களை, இந்த துறை மீட்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது
    1976ம் ஆண்டு ஆவணங்களின் படி, சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகரில், 23 மனைகளும், அடையாறில், 500 மனைகளும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு சொந்தம் என, தெரிவிக்கின்றன. கோவில் நிர்வாகம் இப்பொழுது அடையாறில், 121 மனைகள் தான் உள்ளன என்று கூறுகிறது. தண்டையார்பேட்டை பற்றி பேச்சே இல்லை. கொள்ளையோ கொள்ளை. 
    கடந்த 30 - 40 ஆண்டுகளில், கோவில்களும் அறக்கட்டளைகளும் இழந்த நிலங் களின் மதிப்பு, இன்றைக்கு குறைந்தது, 25 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்.


    http://election.dinamalar.com/detail.php?id=4923

    Tuesday, April 1, 2014

    கோவில் கணக்கு தணிக்கை அவலட்சணங்கள்

    கடந்த 1976ம் ஆண்டு, 'அறநிலைய துறை யால் நிர்வகிக்கப்படும் கோவில்களை, அந்த துறையே தணிக்கை செய்யலாம்' என்ற, அரசாணையை தி.மு.க., அரசு கொண்டு வர ஏற்பாடு செய்தது. இந்த அநியாய அரசாணையை கொண்டு வருவதற்கு முன்னால், தி.மு.க அரசை, மத்திய காங்கிரஸ் அரசு, 1976 ஜனவரி 31ம் தேதி கலைத்துவிட்டது.
    அதன் பிறகு நடைபெற்ற கவர்னர் ஆட்சியின் போது, இந்த அரசாணை நிறைவேறும்படி, அறநிலைய துறையே பார்த்து கொண்டது. அன்றில் இருந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிர்வாகத்தை, தானே தணிக்கை செய்து வருகிறது அறநிலைய துறை! எவ்வளவு 'வெளிப்படையான' ஏற்பாடு!

    தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே தணிக்கை செய்யும் வசதி அனைத்து துறைகளுக்கும் இருந்தால், '2ஜி' ஊழலோ, நிலக்கரி ஊழலோ வெளியே தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அது போலத்தான், அறநிலைய துறையின் மாபெரும் ஊழல்களும் வெளியே தெரிவதில்லை. அறநிலைய துறை சட்ட பிரிவு - 87ன் படி, ஐந்து லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உள்ள கோவில்களில், ஒருங்கியல் தணிக்கை கட்டாயம் நடைபெற வேண்டும். அதாவது, இத்தகைய கோவில்களில், செலவுகள் நடை பெற்ற உடனேயே, அந்த செலவுகள் தணிக்கைக்கு உட்பட வேண்டும். ஆனால், கோடி ரூபாய் வருமானம் உள்ள கோவில்களில் கூட, சட்டப்படி நடைபெற வேண்டிய உடனுக்குடனான தணிக்கை நடைபெறுவதில்லை. சரி, ஆண்டு முடிந்தவுடன் தணிக்கை நடைபெறுகிறதா என்றால், அதுவும் இல்லை. இரண்டு - மூன்று ஆண்டு களாக தணிக்கை நடைபெறாமல் நூற்றுக் கணக்கான கோவில்களின் கணக்குகள் கிடப்பில் உள்ளன. இது பெரும் குற்றம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் 2004ம் ஆண்டு கணக்குகள், 2005ல் தணிக்கை செய்யப்பட்டு, 2007 பிப்ரவரி 19ம் தேதி, கோவில் நிர்வாகத்திற்கு அறிக்கையாக கொடுக்கப்பட்டது. அதில் உள்ள தணிக்கை குற்றச்சாட்டுக்களுக்கும், ஆட்சேபனைகளுக்கும் எந்த பதிலும் கொடுக்காத கோவில் நிர்வாகம், அவசர அவசரமாக, தணிக்கை அறிக்கைகளுக்கு 2013 பிப்ரவரி 18ம் தேதி அன்று, தணிக்கை அறிக்கை கொடுக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பின், ஒரு பதில் அறிக்கையை கொடுத்தது. கொடுத்த மறுநிமிடம் மண்டல தணிக்கை யாளர், அதற்கு 'மேல்குறிப்புரை' வழங்கினார். மேலும் சில ஆண்டுகளுக்கான பதில் அறிக்கை களுக்கு, 2013 பிப்ரவரி 20ம் தேதியே 'மேல்குறிப்புரை' வழங்கினார். அடுத்த இரு நாட்களில், ஆணையர் கூட்ட அமர்வில் இவையெல்லாம், அவசரம் அவசரமாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. அறநிலைய துறையின் தணிக்கை லட்சணம் எப்படி உள்ளது என்பதற்கு, இந்த கோவில் ஒரு உதாரணம் தான்.

    இந்த துறையில், 2010ம் ஆண்டு வரை, தீர்வை செய்யப்படாமல் இருந்த தணிக்கை தடைகளின் எண்ணிக்கை 7,46,586! அதாவது, ஏறத்தாழ 7.5 லட்சம் முறைகேடு சம்பவங்கள் நடந்திருக்கலாம். இவற்றை எல்லாம், இப்படித்தான் அவசரமாக, கூட்டமர்வில் தீர்வை செய்யப் போகின்றனர் போலிருக்கிறது. 'திருடன் புகுந்த ஆறாம் மாதம் நாய் குரைத்ததாம்' என்ற நிலையை விட இது மோசம். இதில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், இன்றளவும் இந்த துறையில் சில நல்ல, நேர்மையான தணிக்கை அலுவலர்கள் உள்ளனர் என்பதுதான். அவர்களால் தான்,

    * திருச்செந்தூரில் 5,389 கோவில் மாடுகள் காணாமல் போனது

    * கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 3 லட்சம் கனஅடி கிரானைட் கொள்ளை அடிக்கப்பட்டது

    * கோவில் கட்டண சீட்டுகளில் நடந்த ஊழலில் ஒரே ஆண்டில் 1.5 கோடி ரூபாய் ஊழல்

    * அறநிலைய துறையின் கோவை இணை ஆணையர், அமைச்சர் உறவினருக்கு, கோவில் பணத்தில் விமான பயணச்சீட்டு வாங்கியது

    * செம்மொழி மாநாட்டிற்கு, மருதமலை கோவிலில் இருந்து பெரும் தொகை கொடுத்தது

    * கோவில் யானையை படப்பிடிப்புக்கு கொடுத்து, சினிமா கம்பெனியினர் அந்த யானையையும், பாகனையும் அம்போ என்று, நடுக்காட்டில் விட்டுச் சென்ற பிறகு, கோவில் பணத்தில் இருந்து, பெரும் செலவு செய்து அவர்களை மீட்டு வந்தது

    * ஸ்ரீரங்கம் கோவிலில், ஒரே ஆண்டில் 105 மாடுகள் இறந்து போனது உள்ளிட்ட பகீர் சம்பவங்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ஆனால், தணிக்கையாளர்கள் கடமை தவறாமல் பதிவு செய்துள்ள இத்தகைய கடுமை ஆன தவறுதல்கள் மீது, ஆணையரோ, அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்; எடுக்கவில்லை. இப்படி எந்த பிரயோஜனமும் இல்லாத தணிக்கைக்கு, இவர்கள் வசூலிக்கும் தொகை, மொத்த வருமானத்தில் 4 சதவீதம். இது மிகமிக அநியாயமான ஒரு கட்டணம். 1,23,000 கோடி ரூபாய் வைப்பு நிதி, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், இந்தியா முழுவதும் பரவியுள்ள 1,882 கிளைகள், 12,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள ஆந்திரா வங்கியை ஆண்டுத் தணிக்கை செய்ய, ஆறு பட்டய கணக்கர் நிறுவனங்களுக்கு, அந்த வங்கி வழங்கும் தொகை 15 கோடி ரூபாய். அதாவது, மொத்த வருமானத்தில் 0.125 சதவீதம் மட்டுமே. ஆனால், 660 கோவில்களுக்கு ஒரு தணிக்கை கையேடு கூட இல்லாமல், மோசமாகவும், தாமதமாகவும், எந்த பலனும் அளிக்காத வகையில் செய்யப்படும் தணிக்கைக்கு, தணிக்கை கட்டணம் என்ற பெயரில் இந்த துறை அடிக்கும் கொள்ளையோ 25 கோடி ரூபாய். இந்த அநியாய தொகையையும், இவர்கள் தணிக்கையை துவக்கும் முன்பே எடுத்துக்கொண்டு விடுவர். இந்த துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் உள்ளவரை, தமிழக கோவில்களில் நல்ல நிர்வாகத்தை நாம் பார்க்கவே முடியாது!

    செய்தி : http://election.dinamalar.com/m/detail.php?id=2505 

    Wednesday, March 19, 2014

    டபுள் ஆக்ட்' தக்கார்கள்,டைரக்ட்' செய்யும் தமிழக அரசு

    'அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை' என்பதை, நிரூபிக்கும் வகையில், ஒரு ஜனநாயக அரசு, தமிழக இந்துக்களை காலம் காலமாக ஏமாற்றி வருகிறது

    இந்து அறநிலைய சட்டத்தின் 47வது பிரிவுப் படி, அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர் குழுவை, அரசு அமைக்க வேண்டும். கோவில்களையும், இந்து சமய அறக்கட்டளைகளையும் நிர்வகிப்பதற்கு, சட்டப்படி, அறங்காவலர்களுக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. மேலும்,கோவில் பணியாளர் நியமனம்கோவில் பணத்தை செலவழிப்பதற்கான ஒப்புதல் வழங்குவதுகோவில் சொத்துகளை விற்பதற்கு (சிவில் சட்டப்படி, நீதிமன்ற
    ஒப்புதலுடன் இது நடக்க வேண்டும்) கோவில் சொத்துகளை குத்தகைக்கு விடுவதற்கு
    என, அனைத்து முக்கிய முடிவுகளுக்கும், முதலில் அறங்காவலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.அதேபோல், கோவிலின் பூஜை, உற்சவம், கும்பாபிஷேகம், பராமரிப்பு போன்றவற்றில் அறநிலைய துறை அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ சுத்தமாக எந்த அதிகாரமும் கிடையாது என, அறநிலைய சட்டம் தெரிவிக்கிறது.

    அறங்காவலர்களுக்கு மட்டுமே இவை குறித்து முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.அறங்காவலர்களின் பணி இவ்வளவு முக்கியமானதாக இருக்க, கடந்த மூன்று ஆண்டுகளாக, தற்போதைய தமிழக அரசு, வேண்டுமென்றே, யாரையும் நியமிக்கவில்லை. கட்சிக்காரர்களையும், பெயர் அளவில், இந்துக்களாக இருப்பவர்களையும், கிரிமினல் பேர்வழிகளையும் அறங்காவலர்களாக நியமனம் செய்யாமல் இருப்பது ஒரு வகையில் நல்லதுதான். ஆனால், தமிழக கோவில்களையும், இந்து சமய அறக்கட்டளைகளையும் கேள்வி கேட்பாரின்றி, அரசின் முழு கட்டுப்பாட்டில் வைப்பது தான், இந்த தாமதத்தின் நோக்கம்.அறங்காவலர்கள் இல்லாமல் கோவில் நிர்வாகங்கள் எப்படி நடக்கின்றன? இதற்கு, 47வது சட்டப் பிரிவில் ஒரு வழிவகை தரப்பட்டு உள்ளது. எப்போதாவது பயன்படுத்த வேண்டிய இந்த பிரிவை, அரசும், அறநிலைய துறையும், மோசடியாக பயன்படுத்துகின்றன.

    அந்த சட்ட பிரிவின் படி, 'ஒரு அறங்காவலர் குழு, இரண்டு ஆண்டுகளுக்கு, நிர்வாகத்தில் இருக்கும். இரண்டு ஆண்டுகள் முடிந்தோ அல்லது குழு கலைக்கப்பட்டோ, மீண்டும் அறங்காவலர்களை நியமனம் செய்யும்முன், தக்கார் ஒருவர் தற்காலிகமாக குழுவின் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்வதற்காக நியமனம் செய்யப்படலாம்.'

    இதை பயன்படுத்தி, அரசு, இரண்டு வகையான மோசடிகளில் ஈடுபடுகிறது;
    1 இரண்டு ஆண்டுகள் ஆயுள் உள்ள அறங்காவலர் குழுவின் இடத்தில், தற்காலிகமாக நியமிக்கப்பட வேண்டிய நபராகிய தக்காரின் பதவி காலத்தை இரண்டு ஆண்டுகளை தாண்டி நீட்டிப்பது.
    2 தக்காராக அறநிலைய துறை அதிகாரிகளையே நியமிப்பதுஒரு கோவிலுக்கு அறங்காவலராக இருப்பவர், அந்த கோவில் எந்த மத உட்பிரிவைச் சேர்ந்ததோ, அந்த சமூகத்தில் இருந்து வர வேண்டும். இரண்டாவது, அந்த கோவில் எந்த ஊரில் இருக்கிறதோ அந்த ஊரை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இவற்றோடு அவர் தெய்வ பக்தியும், நல்லொழுக்கமும், கோவிலுக்குத் தன் நேரத்தை செலவழிக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

    எந்த கோவிலுக்கும் அரசு ஊழியர்களை, அறங்காவலராக நியமனம் செய்ய அறநிலைய துறை சட்டத்தில், வழிவகை செய்யப்படவில்லை. அப்படி செய்யவும் முடியாது. இதில் சட்ட சிக்கல்களும், ஒழுங்குமுறை முரண்பாடுகளும் உள்ளன. ஆயினும், கடந்த 30 - 40 ஆண்டுகளாக, இந்த மோசடி, 'ஜாம் ஜாம்' என, நடந்து வருகிறது. சில கோவில்களில் செயல் அலுவலரே, அந்த கோவிலின் தக்காராக நியமனம் செய்யப்படும் மாபெரும் மோசடியையும் பார்க்கலாம்.

    'ஒரு வங்கிக் கணக்கை இயக்க, இருவர் கையெழுத்து தேவை' என, ஒரு நிறுவனத்தில் கட்டுப்பாடு இருந்தால், ஒருவரே இரண்டு கையெழுத்துகளையும் போட்டால் வங்கி பணம் தராது. அத்தகைய காசோலை செல்லுபடியாகாது. அதுபோன்று தான் இந்த, 'டபுள் ஆக்ட்' தக்கார்களின் உத்தரவுகளும். அவை ஒன்றுமே செல்லுபடியாகாது.

    சொத்தையான இந்த தக்கார் நியமனங்களை மறைக்கத்தான்; சில பெரிய மனிதர்களை, தம் சொந்த செலவில், கோவில்களுக்கும், தர்ம காரியங்களுக்கும் செலவு செய்யும் தொழிலதிபர்களை முக்கிய கோவில்களுக்கு, அரசு, தக்கார்களாக நியமனம் செய்கிறது. மேலே, நல்ல பழங்களை வைத்துவிட்டு, கீழே எல்லாவற்றையும் சொத்தையாக வைக்கும் வியாபாரம் தான் இதுவும்.இன்னும் எத்தனை காலம், தமிழக மக்கள் கேள்வி கேட்காமல் இருக்கப் போகின்றனரோ?டி.ஆர்.ரமேஷ்தலைவர், ஆலய வழிபடுவோர் சங்கம்

    http://www.dinamalar.com/district_detail.asp?id=936256

    Saturday, March 8, 2014

    கோவில் பணத்தில் அமைச்சருக்கு'இன்னோவா'


    சென்னை, மயிலாப்பூரில், பெரும் பணக்காரர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு, சென்னையில் பல இடங்களில், மிக மிக மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அவற்றில், ஒரு சொத்தில் இருந்து வரக்கூடிய வருமானம் மூலம் மட்டுமே, மயிலை கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி, ஒரு கி.மீ., சுற்றளவில் இருக்கக்கூடிய, எல்லா ஏழைக் குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை இலவசமாக, நல்ல கல்வி நிலையங்களில், எந்த செலவும் இல்லாமல் படிக்கலாம். ஒரு சொத்தில் இருந்தே இவ்வளவு நல்ல காரியம் செய்யலாமா? அந்தப் பணக்காரர் யார்? ஏன் அவர் இப்படிப்பட்ட தர்ம செயல்களை செய்யவில்லை? என்றெல்லாம், கேட்கத் தோன்றுகிறதா?
    அந்தப் பணக்காரர் சாட்சாத் கபாலீசுவரர்தான். அவர் பெயரில், தர்ம காரியங்கள் நடக்காமல் இருப்பதற்கு முழுக் காரணம் அறநிலைய துறையும், அதில் நிலவும் அரசியலுமே. ஆண்டவன் சொத்து, அரசியல்வாதிகளால், எப்படி சூறையாடப்படுகிறது என்பதற்கும், அறநிலைய துறையிடம் இருந்து கோவில்கள் ஏன் மீட்கப்பட வேண்டும் என்பதற்கும், கபாலீஸ் வரரின் சொத்துகள் ஒரு உதாரணம் தான். கபாலீஸ்வரர் கோவிலின், (அறக்) கட்டளைக்கு, சென்னையில் பல முக்கிய இடங்களில் சொத்துகள் உள்ளன. அவற்றில் ஒரு பகுதியாக, சென்னை சேமியர்ஸ் சாலையில், 305 மனைகள் உள்ளன. அங்கு ஒரு மனைக்கு, அரசு வழிகாட்டுதலின் படி, மாதம் ஒன்றிற்கு மூன்று லட்சம் ரூபாய் வாடகை வரவேண்டும். அதாவது, அந்த ஒரு சொத்தில் இருந்து மட்டும், ஆண்டுக்கு, 110 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டும். இந்த வருமானம், கோவிலின் அனைத்து செலவுகளையும் சந்திக்க போதுமானது. செலவுகள் போக, இந்து தர்மத்தின் நலனுக்காக, பற்பல அறக்காரியங்களை மேற்கொள்ள முடியும். கபாலீஸ்வரர் கோவிலின் அனைத்து சொத்துக்களும், இப்படியே செலவிடப்பட்டால், அரசு திறந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையை போல, பல மருத்துவமனைகளை திறந்து, நடத்தலாம்.

    இதேபோல், திருவண்ணாமலை அருணாசலேசுவரருக்கும், காஞ்சி ஏகாம்பரேசுவரருக்கும், மயிலை மாதவப் பெருமாளுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சென்னையில் உள்ளன. அவற்றில் இருந்து, இந்த கோவில்களுக்கு, சந்தை மதிப்பில் நூறில் ஒரு பங்கு கூட, வருமானம் வருவதில்லை. அறநிலைய துறை சட்டத்தைப் பார்த்தால், மூன்று விஷயங்கள் நமக்குத் தெளிவாகப்புரியும்.

    * அரசியல் அமைப்பு சட்டப்படி, அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டிய நம் நாட்டில், அரசுக்கோ, அறநிலைய துறைக்கோ கோவில் உள்ளே, சுத்தமாக எந்த வேலையும் கிடையாது. அவர்கள் கோவில் உள்ளே அலுவலகம் கட்டி, ஒவ்வொரு வழிபாட்டிலும் குறுக்கீடு செய்வதும், மேற்பார்வை செய்வதும் சட்டவிரோதம் மாத்திரமல்ல; மத விஷயங்களில் தலையிடும் அநியாய செயலாகும்.

    * அறநிலைய துறை செயல் அலுவலருக்கு, கோவில் சொத்துகளை பாதுகாப்பது, அவற்றில் இருந்து வரவேண்டிய முறையான வருமானத்தை தவறாமல் பெறுவது ஆகியவை மட்டுமே பணி.

    * அதற்காக, கோவில்களின் அசையா சொத்துக்களைப் பாதுகாக்க, அறநிலைய துறைக்கும், செயல் அலுவலருக்கும், சட்டத்தில் மிகச்சிறப்பான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை பயன்படுத்தி, நீதிமன்றங்களுக்கு செல்லாமல், நேரடியாகவே, ஆக்கிரமிப்பாளர்களையும், வாடகை பாக்கி உள்ளவர்களையும் வெளி யேற்றலாம். வராத தொகையை, ஜப்தி செய்தும் எடுக்கலாம்.
    * சரி, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, ஒரு மதத்தின் வழிபாட்டில் தலையிட்டாகி விட்டது, பின், அதற்காக இயற்றப்பட்ட சட்டத்தையாவது அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் கடைபிடிக்கிறார்களா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம் இது, நேரடியாக பணம் சம்பாதித்துக் கொடுக்கக் கூடிய துறை. வரிப்பணத்தை செலவிட்டு, டெண்டர் விட்டு, பல்வேறு இடங்களில் கணக்குக் காட்டி எல்லாம் சம்பாதிக்க வேண்டியது இல்லை, நேரடியாக பணம் சம்பாதிக்கலாம்.
    * 'ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு பெரிய தொகையை இப்போதே மொத்தமாகக் கொடுத்து விடு; எனக்கும், அதில் பாதி அளவு கொடு. 30 ஆண்டுகளுக்கு, கேட்பாரின்றி இந்த இடத்தை அனுபவித்துக் கொள்ளலாம்' என, செயல் அலுவலர் எடுத்துச் சொல்வார். இப்படி நேரடி வருமானம் உள்ள பசையான துறையாக இது இருக்கிறது.

    * கோவில் நிலங்களில், ஆயிரக்கணக்கில் குடியிருப்போர், குத்தகைதாரர்களிடம், 'நீங்கள் எங்கள் கட்சிக்கே ஓட்டு போடுங்கள். உங்களை நாங்கள் இங்கிருந்து காலி செய்ய மாட்டோம்; வாடகையையும் உயர்த்த மாட்டோம்' என, ஓட்டுப் பிச்சையும் எடுக்கலாம். உண்மையில் கோவிலில் இருந்து, நேரடியாக குத்தகையோ, வாடகை உரிமையோ முறையாகப் பெற்றவர்கள் மிகக் குறைவு. வேதாரண்யத்தில், 2,000 ஏக்கர் கோவில் நிலங்களை, ஏக்கருக்கு, இரண்டு ரூபாய் வீதம் அரசே குத்தகைக்கு எடுத்து, அதை நூற்றுக்கணக்கானோருக்கு, உள்குத்தகைக்கு விடுகிறது. அதை, 40-50 ஆண்டுகளாக, எந்த கமிஷனரும் கேள்வி கேட்கவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு, எல்லாக் கோவில்களிலும், கோவில் பணத்தை எடுத்து திதி கொடுக்க, அறநிலைய துறை கமிஷனர்கள் அனுமதிக்கின்றனர். அந்த திதி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு கோவில் நடை சாத்தப்பட்டபின் அமைச்சர் வந்தாலும், அவர் வசதிக்காக நடை மீண்டும் திறக்கப்படுகிறது. இப்படி செய்பவர், குத்தகை அநியாயத்தை எங்கே தட்டிக்கேட்கப் போகிறார்? 'கோவில் பணத்தில், அறநிலைய துறை அமைச்சர் உபயோகத்திற்காக, 16 லட்சம் ரூபாய்க்கு, 'இன்னோவா கார் வாங்கலாம்' என, இதே அறநிலைய துறை கமிஷனர்கள் தானே, உத்தரவில் கையெழுத்து போட்டுக் கொடுக்கின்றனர்! தமிழக கோவில்களை பொறுத்தவரை, ஆட்சிகள் மாறலாம், ஆனால், அரசியல் மாறுவதில்லை. அறநிலைய துறையில் காட்சிகளும் மாறுவதில்லை.

    டி.ஆர்.ரமேஷ், தலைவர், ஆலய வழிபடுவோர் சங்கம்