Sunday, April 13, 2014

50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் "சுவாகா!'


கோவில் மற்றும் அறக்கட்டளைகளின் நிலங்களை கையகப்படுத்துவது, கூடிய மட்டும் தவிர்க்கப் பட வேண்டும் என்றும், தகுந்த மாற்று நிலம் கிடைக்காத போது, கடைசி கட்டமாகத் தான் கோவில் நிலங்களை பொது நன்மைக்காக எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் அரசாணைகளும், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களும், தெள்ளத்தெளிவாக கூறுகின்றன. "ஆணையரின் அனுமதி இல்லாமல் கோவில் சொத்துக்களை விற்க முடியாது, கோவிலின் நலனுக்கு விரோதமாகவும் விற்க முடியாது' என, அறநிலைய சட்டம் பிரிவு சு 34 கூறுகிறது. பிரிவுகள், 78 மற்றும் 79, கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கும், வருமான பாக்கிகளை ஜப்தி செய்து எடுக்கவும், இந்த துறை அதிகாரிகளுக்கு மிகச் சிறப்பான அதிகாரங்களை அளிக்கின்றன. சட்டமும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் இவ்வாறு இருக்கும் போது, கோவில் சொத்துக்களில் இருந்து, 90 சதவீதம் வருமானம் வராமல் இருப்பதும், மிகப் பெரிய அளவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதும், இந்த துறை தேவை தானா என்ற, கேள்வியை எழுப்புகிறது. வருமானத்தை தான் சரியாக பெறவில்லை. மதிப்பு மிக்க நிலங்களையாவது இந்த துறை காப்பாற்றுகிறதா என்றால், உங்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. கடந்த, 1986ல், 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கோவில்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் சொந்தமாக இருந்ததாக, அரசு கொள்கை குறிப்பு தெரிவிக்கிறது. இந்து சமய நிறுவனங்களுக்கு இப்போது உள்ள நிலங்களின் பரப்பு, 4.78 லட்சம் ஏக்கர். அதாவது, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் சேர்த்தால், ஏறத்தாழ, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இந்த துறை தொலைத்து உள்ளது. இது மிகப்பெரிய அநியாயம்! இப்படியே போனால் கோவில்களுக்கு நிலங்கள் சொந்தம் என்பதை நாம் கல்வெட்டில் தான் பார்க்கலாம். அந்த கல்வெட்டுகளும், புனரமைப்பு என்ற பெயரில், இந்த துறை அதிகாரிகளால், கண்மூடித்தனமாக பெயர்த்து எறியப்பட்டும், உடைக்கப்பட்டும் வருகின்ற நிகழ்ச்சிகளை நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். நடப்பது என்ன? நிலம் தேவை என்றால் தமிழக அரசு முதலில் கை வைப்பது கோவில் நிலங்களில் தான். அதிலும், 50, 60 ஏக்கர்கள் மேல் தேவை என்றால் அரசு வேறு எங்கும் தேடுவதில்லை. நேராக கோவில் நிலத்தில் கை வைத்துவிடுகிறது. கோவில் நிலத்தை விற்பதற்குத் தக்காருக்கோ, செயல் அலுவலருக்கோ எந்த உரிமையும் கிடையாது. அரசே முன் மொழிந்து, அரசே பரிந்துரை செய்து, அரசே விற்பனைக்கு ஒப்புதலும் அளிக்கும் அநியாயத்தை தமிழகத்திலும், புதுவையிலும் நாம் திரும்பத் திரும்ப பார்கலாம்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை கட்ட, இப்படி தான் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு எடுத்துக் கொண்டது. இதில், மேலும் ஓர் அநியாயம், அப்படி கட்டடங்கள் கட்ட எடுத்துக் கொண்ட நிலங்களில், ஓர் ஏரியும் அடங்கும். நீர் நிலைகளில் எப்படி கட்டடங்கள் கட்டலாம்? அப்படி செய்தால், அரசுக்கும், சாதாரண ஏரி ஆக்கிரமிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?
கோவில் நிலங்கள் கொள்ளையில் நடக்கும் அநியாயங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.
சிக்கல் சிங்காரவேலர் கோவில் நிலங்களுக்கு இழப்பீடு சம்பந்தமான கோப்பு, 10 ஆண்டுகளாக ஆணையர் அலுவலகத்தில் தூங்குகிறது
"மதுரையில், 50 ஏக்கர் நிலங்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தான் சொந்தம்' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பின்பும், தமிழக அரசும் அறநிலைய துறையும் சேர்ந்து, வழக்கில் தோற்றுப் போன ஆக்கிரமிப்பாளனுக்கே விலைமதிப்பற்ற அந்த நிலங்களை பட்டா போட்டுக் கொடுத்தன
அதேபோல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சாதகமாக வந்த பின்பும், மயிலாடுதுறை சாமவேத பாடசாலையின் நிலங்களை, இந்த துறை மீட்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது
1976ம் ஆண்டு ஆவணங்களின் படி, சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகரில், 23 மனைகளும், அடையாறில், 500 மனைகளும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு சொந்தம் என, தெரிவிக்கின்றன. கோவில் நிர்வாகம் இப்பொழுது அடையாறில், 121 மனைகள் தான் உள்ளன என்று கூறுகிறது. தண்டையார்பேட்டை பற்றி பேச்சே இல்லை. கொள்ளையோ கொள்ளை. 
கடந்த 30 - 40 ஆண்டுகளில், கோவில்களும் அறக்கட்டளைகளும் இழந்த நிலங் களின் மதிப்பு, இன்றைக்கு குறைந்தது, 25 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்.


http://election.dinamalar.com/detail.php?id=4923

No comments:

Post a Comment