வெள்ளோடு ராசா கோவிலில்
இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன;
கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை
வெள்ளோடு ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சென்னிமலை,
ஈரோடு அருகே வெள்ளோட்டில் பழமையான ராசா கோவில்
உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் உள்ள சாமி சிலைகளை
கடந்த 2008–ம் ஆண்டு பாலாலயம் செய்து அங்குள்ள அறையில் வைக்கப்பட்டது.
அதன்பிறகு பழைய கோவிலின் அருகிலேயே புதிதாக ராசா சாமி கோவில் கட்டப்பட்டு
கடந்த 2016–ம் ஆண்டு அங்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த மே மாதம் ஈரோட்டை சேர்ந்த பொன்.தீபங்கர் என்பவர்
பழமையான ராசா சாமி கோவிலில் இருந்த 14 கற்சிலைகளை காணவில்லை என திருச்சி
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனு
மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும்,
காணாமல் போன சிலைகளை கண்டுபிடித்து அந்த சிலைகளை கும்பகோணம் தனி
நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி கடந்த
6–ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெள்ளோட்டில் உள்ள பழைய
ராசா சாமி கோவிலில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 4
சிலைகளும், வெளியில் உள்ள கோவிலில் 2 சிலைகளும், புதிய கோவிலுக்குள் 8
சிலைகள் உட்பட 14 கற்சிலைகள் இருப்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த
சிலைகளை எடுத்து செல்வதாக கோவில் நிர்வாகிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.
அப்போது, சாமி சிலைகளை பாலாலயம் செய்து தருவதாகவும், இதற்கு 15 நாட்கள்
அவகாசம் வேண்டும் என்றும் கேட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் திரும்பி
சென்றனர். அதன்பிறகு கடந்த 22–ந் தேதி இரவு சாமிகளுக்கு பாலாலயம் நடந்தது.
அன்று இரவு அங்கு வந்த போலீசார் சிலைகளை எடுக்கவில்லை.
இந்த
நிலையில், நேற்று காலை திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ்
சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை உட்பட 10
போலீசார் வெள்ளோடு புதிய ராசா கோவிலுக்கு வந்தனர். காலை 10.45 மணியளவில்
ஸ்தபதி ஒருவரின் உதவியுடன் சிலைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதலில்
மசிரி அம்மன் சிலையை அகற்றியதுடன் தொடர்ந்து பெரியண்ணசாமி, கோவில்
ஆத்தா–அய்யன், கன்னிமார், உச்சிகுமாரசாமி ஆகிய சிலைகளும், ராசா சாமிக்கு
முன்பாக வலதுபுறம் உள்ள அனுக்ஞா கணபதி, இடது புறம் உள்ள சார்க்கணன் ஆகிய
சிலைகளும், கோவிலுக்கு வெளியே உள்ள சாம்புவன் சிலை உட்பட 8 சிலைகள்
அகற்றப்பட்டன.
அகற்றப்பட்ட இந்த சிலைகளை உயர–அகல அளவு மற்றும் எடை
சரிபார்க்கப்பட்டு பத்திரமாக கும்பகோணம் கொண்டு செல்ல ஒரு ஆட்டோவில்
ஏற்றப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ்
சூப்பிரண்டு சந்திரசேகரன், தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
14
கற்சிலைகள் மாயமானதாக புகாரில் உள்ளது. ஆனால் இந்து அறநிலையத்துறைக்கு
சொந்தமான பழைய கோவிலில் உள்ள அறையில் 4 சிலைகளும், வெளியில் உள்ள மற்றொரு
கோவிலில் 2 சிலைகளும் தொடர்ந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே உள்ளதால்
அதனை நாங்கள் அகற்றவில்லை. மீதமுள்ள 8 சிலைகளை மட்டும் புதிய கோவிலில்
இருந்து அகற்றி எடுத்துள்ளோம். இந்த சிலைகளை கும்பகோணம் தனி நீதிமன்றத்தில்
ஒப்படைத்து விட்டு அதன்பிறகு கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு
மையத்தில் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று
புவுர்ணமி தினமாக இருந்ததால் புதிய ராசா சாமி கோவிலுக்கு நூற்றுக்கணக்கான
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது போலீசார் சிலைகளை
அகற்றி கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விட்டு
சென்றனர்.
https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/25003352/From-the-temple-of-vellodu-Raja--8-statues-removedKumbakonam.vpf
No comments:
Post a Comment