Saturday, September 29, 2018

தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இருந்தது அனைத்தும் தொன்மை வாய்ந்த சிலைகள் : ஐஜி - பொன் மாணிக்கவேல்

கோவிலையே காலி செய்து வீட்டில் வைத்து இருக்கிறார்கள்.

தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கைப்பற்றப்பட்ட அனைத்து சிலைகளும் தொன்மை வாய்ந்த நூற்றாண்டு சிலைகள் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.

தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் நடந்த சோதனை:

தமிழகத்தில் இருக்கும் பிரசித்துப் பெற்ற கோயில்களில்   வரலாற்று மிக்க   ஐம்பொன் சிலைகள் காணாமல் போனதாக  வெளியான குற்றச்சாட்டைத் தொடர்ந்து  சிலைக் கடத்தல் பிரிவு போலீசார் திவீர வேட்டையில் இறங்கினார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிலைக்கடத்தல் குறித்த ஆய்வு மேற்கொண்டார்.  கடந்த 3 மாதத்தில் மட்டும் தமிழக  கோயில்களில் இருந்து காணாமல் போன  சிலைகள் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி சைதாப்பேட்டையிலுள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து  நூற்றாண்டுகளை கடந்த, தொன்மையான சிலைகள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து 2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 5 ஐம்பொன் சிலைகள், 12 உலோகச் சிலைகள், 22 கல்தூண்கள் என மொத்தம் 89 சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்  கைப்பற்றியுள்ளனர்.
தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் கும்பகோணம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மீதமுள்ள சிலைகளை ரன்வீர் ஷா வீட்டில் வைத்தே போலீசார் பாதுகாத்து வருகின்றனர். வீட்டில் 21 தூண்களும், 7 பெரிய சிலைகளும் உள்ளதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த  ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல்   தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டின் ஒரு பகுதியை இடிக்க திட்டம் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 2 நாட்கள்  சோதனைக் குறித்த முழு விபரத்தை வெளியிட்டார்.
அவர் பேசியதாவது, “  இது முழுக்க முழுக்க கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள்.  ஒரு கோவிலையே காலி செய்து வீட்டில் வைத்து இருக்கிறார்கள். பழமையான தூண்களை பெயர்த்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிலைகளும் தூண்களும் வெளியே எடுப்பதில் சிர‌ம‌ம் உள்ளதால், வீட்டின் ஒரு பகுதியை இடிக்க  ஆலோசித்து வருகிறோம். ஒவ்வொரு சிலைக்கும் மிகப்பெரிய பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது.
சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால், நிச்சயம்  தொழிலதிபர் ரன்வீர்ஷா கைதுசெய்யப்படுவார்”  என்று கூறினார்.

Wednesday, September 26, 2018

வெள்ளோடு கோயிலில் காணாமல்போன 8 சிலைகள் குடந்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு


Wednesday, 26 Sep, 1.18 am
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு ராசா கோயிலில் காணாமல் போன 8 கருங்கல் சுவாமி சிலைகளை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
வெள்ளோடு கிராமத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்துக்கு சொந்தமான 800 ஆண்டுகள் பழைமையான ராசா கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை புதுப்பிப்பதற்காக, கோயிலை இடித்துவிட்டு வேறு இடத்தில் புதிய கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து பழைமையான கோயிலை இடிக்கக் கூடாது என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் இக்கோயிலை குறிப்பிட்டே தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் கோயில்களை திருப்பணி செய்ய நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்.
இதனால் வெள்ளோடு ராசா கோயில் இடிக்கப்படவில்லை. இதனிடையே, அதே பகுதியில் புதிய கோயில் கட்டப்பட்டது.
ஆனால், பழமையான கோயிலில் இருந்த 8 கருங்கல் சிலைகள் மாயமானது. இதுகுறித்து வெள்ளோடைச் சேர்ந்த பொன். தீபங்கர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேலுவிடம் புகார் அளித்தார். இதன்பேரில், டிஎஸ்பி சந்திரசேகரன், ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் சிலைகளை திருடியதாக 11 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதையடுத்து ராசா கோயிலில் இருந்த 8 சிலைகளும் புதிதாக கட்டடப்பட்ட கோயிலில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மசிரி அம்மன் சிலை, பெரியஅண்ணா சிலை, கோயில் ஆத்தா அம்மன் சிலை, கன்னிமார்சிலை, உச்சகுமாரசுவாமி சிலை, விநாயகர் சிலை, சாக்கம்மன் சிலை, சாம்புவான் சிலை ஆகிய 8 கற்சிலைகளையும் கைப்பற்றி செவ்வாய்க்கிழமை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இந்த சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நீதிபதி, சிலைகளை கோயில் செயல் அலுவலர் எம். ரமணிகந்தனிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து இந்த கற்சிலைகள் செவ்வாய்க்கிழமை வெள்ளோடு ராசா கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

https://samsung.dailyhunt.in/news/india/tamil/tamil+nadu-epaper-tnadu/vellodu+koyilil+kanamalbona+8+silaikal+kudanthai+neethimanrathil+oppadaippu-newsid-97828861?mode=wap 

Tuesday, September 25, 2018

வெள்ளோடு ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன

வெள்ளோடு ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன; கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

வெள்ளோடு ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன; கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

வெள்ளோடு ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சென்னிமலை, 

ஈரோடு அருகே வெள்ளோட்டில் பழமையான ராசா கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் உள்ள சாமி சிலைகளை கடந்த 2008–ம் ஆண்டு பாலாலயம் செய்து அங்குள்ள அறையில் வைக்கப்பட்டது. அதன்பிறகு பழைய கோவிலின் அருகிலேயே புதிதாக ராசா சாமி கோவில் கட்டப்பட்டு கடந்த 2016–ம் ஆண்டு அங்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த மே மாதம் ஈரோட்டை சேர்ந்த பொன்.தீபங்கர் என்பவர் பழமையான ராசா சாமி கோவிலில் இருந்த 14 கற்சிலைகளை காணவில்லை என திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், காணாமல் போன சிலைகளை கண்டுபிடித்து அந்த சிலைகளை கும்பகோணம் தனி நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி கடந்த 6–ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெள்ளோட்டில் உள்ள பழைய ராசா சாமி கோவிலில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 4 சிலைகளும், வெளியில் உள்ள கோவிலில் 2 சிலைகளும், புதிய கோவிலுக்குள் 8 சிலைகள் உட்பட 14 கற்சிலைகள் இருப்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த சிலைகளை எடுத்து செல்வதாக கோவில் நிர்வாகிகளிடம் போலீசார் தெரிவித்தனர். அப்போது, சாமி சிலைகளை பாலாலயம் செய்து தருவதாகவும், இதற்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் கேட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் திரும்பி சென்றனர். அதன்பிறகு கடந்த 22–ந் தேதி இரவு சாமிகளுக்கு பாலாலயம் நடந்தது. அன்று இரவு அங்கு வந்த போலீசார் சிலைகளை எடுக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை உட்பட 10 போலீசார் வெள்ளோடு புதிய ராசா கோவிலுக்கு வந்தனர். காலை 10.45 மணியளவில் ஸ்தபதி ஒருவரின் உதவியுடன் சிலைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதலில் மசிரி அம்மன் சிலையை அகற்றியதுடன் தொடர்ந்து பெரியண்ணசாமி, கோவில் ஆத்தா–அய்யன், கன்னிமார், உச்சிகுமாரசாமி ஆகிய சிலைகளும், ராசா சாமிக்கு முன்பாக வலதுபுறம் உள்ள அனுக்ஞா கணபதி, இடது புறம் உள்ள சார்க்கணன் ஆகிய சிலைகளும், கோவிலுக்கு வெளியே உள்ள சாம்புவன் சிலை உட்பட 8 சிலைகள் அகற்றப்பட்டன.
அகற்றப்பட்ட இந்த சிலைகளை உயர–அகல அளவு மற்றும் எடை சரிபார்க்கப்பட்டு பத்திரமாக கும்பகோணம் கொண்டு செல்ல ஒரு ஆட்டோவில் ஏற்றப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
14 கற்சிலைகள் மாயமானதாக புகாரில் உள்ளது. ஆனால் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைய கோவிலில் உள்ள அறையில் 4 சிலைகளும், வெளியில் உள்ள மற்றொரு கோவிலில் 2 சிலைகளும் தொடர்ந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே உள்ளதால் அதனை நாங்கள் அகற்றவில்லை. மீதமுள்ள 8 சிலைகளை மட்டும் புதிய கோவிலில் இருந்து அகற்றி எடுத்துள்ளோம். இந்த சிலைகளை கும்பகோணம் தனி நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டு அதன்பிறகு கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று புவுர்ணமி தினமாக இருந்ததால் புதிய ராசா சாமி கோவிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது போலீசார் சிலைகளை அகற்றி கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விட்டு சென்றனர்.

https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/25003352/From-the-temple-of-vellodu-Raja--8-statues-removedKumbakonam.vpf