சென்னை: ''அறநிலைய துறை சட்டத்தின் மூலம், கோவில் செயல் அலுவலரை நியமனம் செய்ய, வழிமுறை இல்லை. இதுவரை செய்த நியமனங்கள் அனைத்தும், செல்லு படியாகாது,'' என, ஆலய வழிபடுவோர் சங்க செயலர், டி.ஆர்.ரமேஷ் கூறினார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள, வைத்தியநாத சுவாமி தேவஸ்தானம், தருமபுர ஆதீன கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கோவிலை, அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து, ஆதீனத்திற்கு, அறநிலைய துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக, தருமபுர ஆதீனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலைய துறையின் நோட்டீசை ரத்து செய்தார். அவர் தன் தீர்ப்பில், 'அறநிலைய துறை சட்டப் பிரிவு ௪௫ன் படி, கமிஷனர், ஒரு கோவிலில் செயல் அலுவலரை நியமிக்க முடியாது' என, குறிப்பிட்டார். இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் சங்க செயலர், ரமேஷ் கூறிய தாவது:
இந்து மத கோவில்களை, அறநிலைய துறை, தன் நிர்வாகத்தில் கொண்டு வர முடியாது. 39 ஆயிரம் கோவில்களை, அறநிலைய துறை, தன் நிர்வாகத்தின் கீழ் வைத்து உள்ளது, சட்ட விரோதம். கடந்த, 55 ஆண்டுகளாக, அதிகாரமே இல்லாத, இந்து சமய அறநிலைய துறை சட்டத்தின், 45வது பிரிவை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கோவில்களை மக்களிடம் இருந்து, அரசு பிடுங்கியுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் தீர்ப்பில், செயல் அலுவலர் நியமிப்பது தொடர்பாக, உச்சநீதிமன்றம், வழிகாட்டியுள்ளது.
* அதன்படி, ஒரு சமய நிறுவனத் தில், பெரும் நிர்வாகக் குறைபாடு இருந்தால் மட்டுமே, குறைபாடுகளை களைய, செயல் அலுவலரை குறுகிய காலத்திற்கு, நியமனம் செய்யலாம்.
* நிர்வாகத்தை சரி செய்யும் நோக்கம் மட்டுமே, அறநிலையத் துறைக்கு இருக்க வேண்டும்.
* சரி செய்த மறு நிமிடம், கோவிலை, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
* செயல் அலுவலர் நியமன உத்தர வில், நியமன காலம் குறிப்பிடப்படாவிட்டால், அந்த உத்தரவு செல்லாது. அதையே, உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளது. மேலும், மிக முக்கியத்துவம் வாய்ந்த தகவலையும், உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்து சமய அறநிலைய துறை கமிஷனர், செயல் அலுவலரை, நியமனம் செய்ய, 45வது சட்டப்பிரிவை பயன்படுத்துகிறார். அந்த பிரிவில் இருக்க வேண்டிய நிபந்தனைகள், சட்டத்தில் இல்லை. அதனால், அந்த பிரிவை பயன்படுத்த, கமிஷனருக்கு எந்த அதிகார மும் கிடையாது. அதிகாரமே இல்லாத, அந்த பிரிவை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கோவில்களில், அறநிலைய துறை, செயல் அலுவலர்களை நியமித்து வந்துள்ளது. அதே தீர்ப்பு தான், வைத்தீஸ்வரன் கோவில் விவகாரத்திலும்,குறிப்பிடப்பட்டுள்ளது.
செயல் அலுவலர் நியமனம் செய்ய அதிகாரமே இல்லாத பிரிவை பயன்படுத்தி, சேலம் சுகவனேஸ்வரர் கோவில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோயில் போன்ற முக்கிய கோவில்களில், சட்ட விரோதமாக செயல் அலுவலர்களை நியமனம் செய்துள்ளது அறநிலைய துறை. பாக்கி இருப்பது அறநிலைய துறை சட்டம் அத்தியாயம், 6வது பிரிவின் மூலம் செயல் அலுவலர் நியமனம் செய்யும் அதிகாரம் தான். இந்த அத்தியாயத்தில் உள்ள பிரிவுகள், 1954ல், உச்சநீதிமன்றத் தால், தடை செய்யப்பட்ட பிரிவுகள். அவற்றை, 1959ல் புதிய சட்டம் இயற்றும்போது சத்தம் போடாமல், மீண்டும் கொண்டு வந்து விட்டது, அன்றைய தமிழக அரசு. அதனால் தானோ, என்னவோ, அறநிலைய துறை, ஒருமுறை கூட இந்த பிரிவை பயன்படுத்தவில்லை. மேம்பட்ட நிர்வாகம் என்ற காரணம் காட்டி, அறங்காவலர்களை நீக்கி விட்டு, தன் துறையை சேர்ந்த அதிகாரியை, 'தக்காராக' காலவரையின்றி நியமனம் செய்து, கோவில்களைக் கைப்பற்றப் பார்க்கிறது; இது, சட்டவிரோதம். இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. அறநிலைய துறை சட்டத் தின் மூலம் செயல் அலுவலரை நியமனம் செய்ய வழிவகையே இல்லை. இதுவரை செய்த நியமனங்கள் எவையும் செல்லுபடியாகாத நியமனங்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=957122