Saturday, August 4, 2018

`உண்மையைச் சொன்னால் கவிதா மட்டுமல்ல...' - ஆதாரங்களுடன் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்


சிலை தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜியான பொன்.மாணிக்கவேலின் கையிலிருக்கும் ஆதாரங்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலை தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜியான பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத்துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் ஆர்வம்காட்டியதோடு ஆணையையும் பிறப்பித்தனர். தமிழகக் கோயில்களில் திருட்டுப்போன சிலைகளைக் கண்டுபிடித்தபோது ஆளுங்கட்சியினர் பொன்.மாணிக்கவேலின் செயலைப் பாராட்டிப் பேசினர். நீதிமன்றம்கூட, ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டபோது சிலை வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் தனி உத்தரவை பிறப்பித்தது.
ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. சிலைகளைக் கண்டுபிடித்த அவர், தங்கச் சிலைகள், தங்கக் கோபுரங்கள் செய்ததில் நடந்த முறைகேடுகளைக் கண்டுபிடித்தது ஏனோ ஆளுங்கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. பழனியில் ஸ்பதி முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால் ஆகியோர் மீது பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்ததை ஆளுங்கட்சியினர் ரசிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றுவிடுவார் என்று ஆளுங்கட்சியினர் அமைதியாக இருந்தனர். ஆனால், ஓய்வு பெறுவதற்குள் சிலை முறைகேடுகளில் தொடர்புடையவர்களை சும்மா விடமாட்டேன் என்று பொன்.மாணிக்கவேல் டீம் கூடுதல் ஆணையர் கவிதாவை கைதுசெய்தது. கவிதாவுக்கு எதிராக காஞ்சிபுரம் கோயில் சிலை முறைகேடு மட்டுமல்லாமல் திருவேற்காடு கோயில், திருத்தணி கோயில் எனப் பட்டியல் உள்ளது. 


இந்து அறநிலையத்துறையின் திருப்பணிகளின் கூடுதல் ஆணையரான கவிதா, அந்தப்பதவியில் நீண்டகாலமாக இருந்துவருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடக்கும் திருப்பணிகளை கவனித்துவந்த கவிதா மீது மூன்று ஆண்டுக்கு முன்பிலிருந்தே குற்றச்சாட்டுக்கள் குவியத் தொடங்கின. ஆனால், சில காரணங்களால் கவிதா இடமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட்டது. கவிதாவுக்கு பக்கப்பலமாக இருந்தவர்கள் ஓய்வு பெற்றதும் அவர் மீது நடவடிக்கைகள் பாயத் தொடங்கின. கவிதாவின் சொந்த ஊர் தஞ்சாவூர். மயிலாப்பூரில் குடியிருந்தார். 
கவிதா கைதானதும் அவருக்கு ஆதரவாக சிலர் அறிக்கை விட்டனர். அவரை ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கவிதாவின் கைது படலத்தோடு சிலை வழக்குகள் சி.பி.ஐ-யிடம் மாறப்போகிறது. பொதுவாக காவல்துறையில் சிலை தடுப்புப் பிரிவுப் பணி என்பது தண்டனைக்குரிய பணியாக கருதப்படும். லத்திகா சரண், டி.ஜி.பி-யாக இருந்தபோதுதான் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூருக்கு கடிவாளம் போடப்பட்டது. அப்போதும் பொன்.மாணிக்கவேல் அப்பிரிவில்தான் இருந்தார். சர்வதேச நெட்வொர்க் கும்பலுடன் சுபாஷ் கபூருக்கு உள்ள தொடர்புகள், உள்ளூர் பிரமுகர்கள் என எல்லாவற்றையும் விசாரணை மூலம் வெளியில் கொண்டுவந்தார் பொன்.மாணிக்கவேல். 

கவிதாவையடுத்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கமான இரண்டு பேருக்கு சிலை தடுப்புப் பிரிவு போலீஸார் குறி வைத்திருந்தனர். இந்தத் தகவல் ஆளுங்கட்சியினருக்குத் தெரியவந்ததும் உஷரான அவர்கள் பொன்.மாணிக்கவேலுக்கு செக் வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல், சமர்ப்பிக்கவுள்ள ஆதாரங்களில் ஆளுங்கட்சியினரின் பெயர்கள் இடம்பிடிக்கும் என்று சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். முன்னதாக பொன்.மாணிக்கவேலுக்கு எந்தவித ஆதாரங்களும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர் இந்து சமய அறநிலையத்துறையினர். திருவேற்காடு கோயிலில் கவிதா தொடர்பான ஆதாரங்கள் எல்லாம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாம்.
https://www.vikatan.com/news/tamilnadu/133030-ig-ponmanickavel-intervention-may-create-political-storm.html 


No comments:

Post a Comment