Saturday, July 21, 2018

ரூ.80 கோடி சிலை திருட்டு வழக்கில் கோவில் பூசாரி கைது

ரூ.80 கோடி சிலை திருட்டு வழக்கில் கோவில் பூசாரி கைது
கைதான ஜெயக்குமார்
சென்னை:

தமிழக சிலை திருட்டு தடுப்பு போலீசார், தமிழகம் முழுவதும் கோவில்களில் திருட்டு போன சிலைகளை மீட்டு வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளும் மீட்கப்படுகின்றன. ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2015-ம் வருடம் காஞ்சீபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் இருக்கும் மணிகண்டேஸ்வரர் கோவிலில் சிவன்-பார்வதி உலோக சிலைகள் திருட்டு போய்விட்டது. இதேபோல 2015-ம் ஆண்டில் வந்தவாசி அருகே உள்ள சவுந்தர்யபுரம் ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 உலோக சாமி சிலைகள் களவு போனது.

அதே ஆண்டில் வந்தவாசி அருகில் இருக்கும் பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலிலும் பிரசன்னவெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் ஆகிய 4 உலோக சிலைகள் திருடப்பட்டது. மொத்தம் 8 சிலைகள் திருடப்பட்டது. இந்த சிலைகளின் மதிப்பு ரூ.80 கோடி ஆகும்.

இந்த சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக, சிலை திருட்டு தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஏற்கனவே இந்த வழக்கில் சினிமா இயக்குனர் வீ.சேகர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட 8 சிலைகளும் மீட்கப்பட்டது.

சென்னை காவாங்கரையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற கோவில் பூசாரி இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். அவர் தலைமறைவாகி விட்டார். அவருக்கு கோர்ட்டில் முன்ஜாமீன் கிடைக்கவில்லை. அவர் பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக சுற்றித்திரிந்தார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்து வந்தார்.

இந்த நிலையில், அவரை நேற்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை கைது செய்ய முக்கியமான தகவல் கொடுத்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டதாகவும், இந்த வழக்கில் விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், கைதான 3 பேர் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக மாறிவிட்டனர் என்றும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார்.