Wednesday, September 26, 2018

வெள்ளோடு கோயிலில் காணாமல்போன 8 சிலைகள் குடந்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு


Wednesday, 26 Sep, 1.18 am
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு ராசா கோயிலில் காணாமல் போன 8 கருங்கல் சுவாமி சிலைகளை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
வெள்ளோடு கிராமத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்துக்கு சொந்தமான 800 ஆண்டுகள் பழைமையான ராசா கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை புதுப்பிப்பதற்காக, கோயிலை இடித்துவிட்டு வேறு இடத்தில் புதிய கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து பழைமையான கோயிலை இடிக்கக் கூடாது என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் இக்கோயிலை குறிப்பிட்டே தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் கோயில்களை திருப்பணி செய்ய நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்.
இதனால் வெள்ளோடு ராசா கோயில் இடிக்கப்படவில்லை. இதனிடையே, அதே பகுதியில் புதிய கோயில் கட்டப்பட்டது.
ஆனால், பழமையான கோயிலில் இருந்த 8 கருங்கல் சிலைகள் மாயமானது. இதுகுறித்து வெள்ளோடைச் சேர்ந்த பொன். தீபங்கர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேலுவிடம் புகார் அளித்தார். இதன்பேரில், டிஎஸ்பி சந்திரசேகரன், ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் சிலைகளை திருடியதாக 11 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதையடுத்து ராசா கோயிலில் இருந்த 8 சிலைகளும் புதிதாக கட்டடப்பட்ட கோயிலில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மசிரி அம்மன் சிலை, பெரியஅண்ணா சிலை, கோயில் ஆத்தா அம்மன் சிலை, கன்னிமார்சிலை, உச்சகுமாரசுவாமி சிலை, விநாயகர் சிலை, சாக்கம்மன் சிலை, சாம்புவான் சிலை ஆகிய 8 கற்சிலைகளையும் கைப்பற்றி செவ்வாய்க்கிழமை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இந்த சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நீதிபதி, சிலைகளை கோயில் செயல் அலுவலர் எம். ரமணிகந்தனிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து இந்த கற்சிலைகள் செவ்வாய்க்கிழமை வெள்ளோடு ராசா கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

https://samsung.dailyhunt.in/news/india/tamil/tamil+nadu-epaper-tnadu/vellodu+koyilil+kanamalbona+8+silaikal+kudanthai+neethimanrathil+oppadaippu-newsid-97828861?mode=wap 

No comments:

Post a Comment