Tuesday, August 5, 2014

அறநிலையத்துறையிடம் இருந்த 47,000 ஏக்கர் மாயமானதா?

தமிழகத்தில் கடந்த, 30 ஆண்டுகளில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரமாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் அறநிலையத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. கோவில்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை முறையாக பராமரிக்கவும், இதன் நிர்வாகத்தில் தனியாரால் தவறுகள் எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்காக என்று கூறி, கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கையில் எடுத்தது. ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு தான் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. முன்னோரும், அரசர்களும் கோவில்களுக்காக விட்டுச் சென்ற நிலங்கள் தொடர்ந்து தர்ம காரியங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே எல்லாரது விருப்பம். ஆனால், இந்த நிலங்களை பராமரிப்பது, பாதுகாப்பதில் அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு, பொதுமக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

பராமரிப்பு இல்லை : கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்காததுடன், அதற்கான ஆவணங்களையும், அறநிலையத் துறையினர் முறையாக பராமரிக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது.

உதாரணமாக, நெல்லை அருகே, வரகுணபாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 4,500 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், இந்து சமய மக்களுக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம், வடுவூர் கோதண்ட ராமர் கோவிலுக்கு சொந்தமான, 5,400 ஏக்கர் நிலம் இப்போது கோவில் வசம் இல்லை. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 112 ஏக்கர் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வேதாரண்யம் சிவன் கோவிலுக்கு சொந்தமான, 13 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என்ன நிலையில் உள்ளன என்பது புதிராக உள்ளது.

47 ஆயிரம் ஏக்கர் எங்கே? : இத்தனைக்கும் மேலாக அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை, ஆய்வு செய்ததில், கடந்த, 30 ஆண்டுகளில், ஏராளமான நிலங்கள் மாயமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த, 1986ல், தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 'இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இது, 4.78 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, கடந்த, 30 ஆண்டுகளில், அறநிலையத்துறை நிர்வாகத்தில, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என்ன ஆனது என்ற கேள்வி, பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செய்தி: http://www.dinamalar.com/news_detail.asp?id=1038126&

No comments:

Post a Comment